காலையிலேயே அன்புமணிக்கு ஹேப்பி நியூஸ்.. நடைபயணத்துக்கு தடையில்லை! அதிர்ச்சியில் அய்யா ராமதாஸ் தரப்பு
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. நடைபயணம் தொடர்பாக அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை மட்டும் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் அனுமதி இல்லாமல் நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது என மனு கொடுக்கப்பட்டுள்ளதால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் உச்சத்தை தொட்டு இருக்கிறது. கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற முழக்கத்தோடு உரிமைப் பயணம் தொடங்கி உள்ளது.
மேலும் நடைபயணம் தொடர்பாக பாடலையும், லட்சினையையும் வெளியிட்டுள்ளார் அன்புமணி. இந்த நிலையில் நான் தான் கட்சியின் நிறுவனர் எனது அனுமதி இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறார் என ராமதாஸ் கூறியிருந்தார்.

பாமக அன்புமணி ராமதாஸ்
மேலும், அன்புமணியில் நடை பயணம் காரணமாக வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் மேலும் பாமக என்ற பெயர் கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இருந்தபோதும் நேற்று திட்டமிட்டபடி திருப்போரூரில் நடை பயணத்தை தொடங்கினார் அன்புமணி. முன்னதாக திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நடைபயணத்தை தொடங்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசூரங்களை வழங்கினார்.
அன்புமணி நடைபயணம்
அடுத்ததாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சமூகநீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான பெண்கள் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி நல்வாழ்வுக்காண உரிமை உள்ளிட்ட பத்து உரிமைகளை மீட்க நடைப்பயணத்தை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ்
இது ஒருபுறம் இருக்க ராமதாஸ் கொடுத்த மனு தொடர்பாக அன்புமணி நடை பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எந்தவித தடையும் இல்லை என கூறி இருக்கிறார் பாமக நிர்வாகியும் வழக்கறிஞருமான பாலு. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மருத்துவர் அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என கூறியிருக்கிறார்.
அன்புமணி நடைபயணம் தடை
அன்புமணி ராமதாஸின் நடை பயணம் தொடர்பாக அந்தந்த பகுதி காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய மனுவைப் பெற்று நடை பயணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாம் என சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகவும், பேரணிக்கு தடை என்பது பொய்யானது என கூறி இருக்கிறார். இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த ராமதாஸ் தரப்புக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications