களமிறங்கிய பிரசாந்த் கிஷோர்.. பீகார் இடைத்தேர்தலில் பாஜக கோட்டையில் போட்டி.. வெல்வது சுலபமல்ல
பாட்னா: பீகாரில் உள்ள பாங்கிபூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக ஜன் சுராஜ் கட்சி சார்பில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டசபை தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபினின் கோட்டையாகும். கடந்த 4 சட்டசபை தேர்தல்களில் நிதின் நபின் தொடர்ந்து வென்றார். ராஜ்யசபா எம்பியானதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் களமிறங்கி உள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் உள்ளார். இவர் பீகாரை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் நிதின் நபின் பீகாரின் பாங்கிபூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இதையடுத்து தான் அவர் பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜகவின் தேசிய தலைவர் ஆனதால் நிதின் நபின் ராஜ்யசபா எம்பியானதோடு, பாங்கிபூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த பாங்கிப்பூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 3ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் தான் பாங்கிபூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதுதான் அவர் முதல் தேர்தல் ஆகும். பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்டு ஆட்சியை பிடிக்க உதவிய பிரசாந்த் கிஷோர் இப்போது வெல்வாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மையில் இந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெல்வது எளிதான காரியமாக இருக்காது. ஏனென்றால் இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாகும். கடந்த 2010, 2015, 2020, 2025 என்று மொத்தம் 4 தேர்தலில் தற்போதைய பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் தான் வெற்றி பெற்றார். இது அவரது கோட்டையாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜகவின் நிதின் நபின் மொத்தம் 98,299 வாக்குகள் பெற்றார். ஆர்ஜேடி கட்சியின் ரேகா குமாரி 46,363 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். இதனால் நிதின் நபின் சுமார் 51,936 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதனால் பாஜக எளிதில் இந்த தொகுதியை விட்டு விடாது. குறிப்பாக நிதின் நபின் சிறப்பு கவனம் செலுத்தி பாஜக வேட்பாளரை வெல்ல வைக்கும் முனைப்பில் பணியாற்றுவார்.
அதுமட்டுமின்றி தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி தான் முதல்வராக உள்ளார். இதனால் ஆளும் கட்சியாக பாஜக இருப்பது பிரசாந்த் கிஷோருக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பீகாரில் ஜன்சுராஜ் கட்சிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. இதற்கு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலை சாட்சியாகும்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. மாறாக 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
இதையடுத்து பீகாரில் கணிசமாக ஓட்டுகளை பெற்று பல எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நினைத்த பிரசாந்த் கிஷோருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதையடுத்து அவர் கட்சியின் மொத்த அமைப்புகளையும் கலைத்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இருப்பினும் கூட அவரது கட்சி இன்னும் உத்வேகம் பெறவில்லை. இந்நிலையில் தான் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் இந்த கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வென்றது. இந்த கூட்டணியில் பிற கட்சிகள் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 25, காங்கிரஸ் 6, சிபிஐ (எம்எல்) எல் 2, மார்க்சிஸ்ட் 1, ஐஐபி கட்சி ஒன்று என்று மொத்தம் 35 தொகுதகிளில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வரானார். நிதிஷ் குமார் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி ராஜ்யசபா எம்பியானதால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவிற்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பாஜகவின் முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். இதனால்
பீகாரின் பாங்கிபூர் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் என்பது ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி உள்ள பிரசாந்த் கிஷோருக்கு கடும் போட்டியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications