அது என்ன குதிரை பேரம்? அரசியல்வாதிகள் கட்சி மாறுவதை ஏன் ஹார்ஸ் டிரேடிங்ன்னு சொல்றாங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் இப்போது கட்சித் தாவல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தவெகவிற்கு அதிமுகவில் இருந்து அதிக நிர்வாகிகள் தாவி வருகின்றனர். இதை ஹார்ஸ் டிரேடிங், குதிரை பேரம் என்று நிறைய பேர் விமர்சனம் செய்வதை கேட்டு இருப்பீர்கள்.. அரசியல்வாதிகள் கட்சி மாறுவதை ஏன் ஹார்ஸ் டிரேடிங் என்று சொல்கிறீர்கள் என்று யோசித்து உள்ளீர்களா?

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில வாரங்களாகவே குதிரை பேரம் என்ற வார்த்தை மிகத் தீவிரமாகப் புழங்கி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி மற்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களும், சிட்டிங் எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து கட்சி மாறி வருவது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கர், எம். ஆர் விஜயபாஸ்கர் என்று வரிசையாக அதிமுக கூடாரம் தவெக பக்கம் தாவி வருகிறது.

Horse Trading

இந்தச் சூழலில், எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ஆசை காட்டி, குதிரை பேரம் பேசி இழுக்கிறார்கள் என்று அதிமுகவும், தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக ரூ.35 கோடி பேரம் பேசுகிறது என்று ஆளுங்கட்சியான தவெகவும் மாறி மாறிப் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குதிரை பேரம் - வார்த்தையின் வரலாறு

அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் சாதாரணமாகப் பயன்படுத்தும் இந்த குதிரை பேரம் அல்லது ஹார்ஸ் டிரேடிங் என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன என்பதைப் பார்ப்போம்.

இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் குதிரை வியாபாரம் என்பதாகும். நம்ம ஊர் மாட்டு சந்தைகளில் மாடுகளை விற்பது போலவே 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் குதிரைச் சந்தைகள் மிகவும் பிரபலம். அக்காலத்தில் போக்குவரத்துக்கும், விவசாயத்திற்கும் குதிரைகளே பயன்படுத்தப்பட்டு வந்ததால், அவற்றின் தேவை மிக அதிகமாக இருந்தது.

ஆனால், ஒரு குதிரையின் உண்மையான வயது, அதன் ஆரோக்கியம், வேகம் ஆகியவற்றை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது. மாடு என்றால் பால் கறப்பது, மடி கணம் இப்படி சில விஷயங்களை பார்ப்பார்கள். ஆனால் குதிரை வியாபாரிகள், தாங்கள் விற்க நினைக்கும் வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட குதிரைகளின் குறைபாடுகளை மறைத்து, ஏமாற்றி கூட அதை விற்பனை செய்வார்கள்.

குதிரையின் பல், அதன் ஓடும் திறன் ஆகியவற்றை வைத்து.. அதன் வயதை கண்டுபிடிக்க வியபாரிகள் முயல்வார்கள். இதற்காக கடுமையான பேரங்கள் நடக்கும்.

குதிரைச் சந்தையில் நடக்கும் இந்த வியாபாரத்தில் நேர்மை என்பது சுத்தமாக இருக்காது. வாங்குபவரை ஏமாற்ற விற்பனையாளரும், மிகக் குறைந்த விலைக்கு குதிரையை வாங்க வாங்குபவரும் பல வாதங்களில் ஈடுபடுவார்கள். சில வாதங்கள் சண்டை அளவிற்கு கூட செல்லும். இதில் உண்மையை பேசுவதை விட பொய் பேசுபவர்களே அதிகம். 1 குதிரையை வாங்க 1 நாள் முழுக்க கூட விவாதங்கள் நடக்கும். இதைத்தான் ஹார்ஸ் டிரேடிங் என்பார்கள். அதாவது நேர்மையற்ற முறையில் நடத்தப்படும் மிக மோசமான, கீழ்த்தரமான வியாபாரம்.

இதன் அடிப்படையிலேயே 1890களில் இந்த வார்த்தை மெதுவாக அமெரிக்க அரசியல் களத்திற்குள் நுழைந்தது. நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ ஒரு குறிப்பிட்ட சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அப்போது ஆளுங்கட்சித் தலைவர்கள் திரைக்குப் பின்னால் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, நீங்கள் இந்த மசோதாவிற்கு வாக்களித்தால், உங்களுக்குச் சாதகமாக இந்தச் சலுகையைச் செய்து தருகிறோம் என்று பேரங்களில் ஈடுபடுவார்கள்.

அப்போது கட்சித்தாவல் தடை சட்டம் எல்லாம் இல்லை. குதிரைச் சந்தையைப் போலவே, இங்கும் கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு தேவைக்கு ஏற்றபடி மாறி மாறி வாக்களிப்பார்கள். இந்த கொடுக்கல்-வாங்கல் அரசியலைத்தான் 'ஹார்ஸ் டிரேடிங்' என்று அழைக்கத் தொடங்கினர்.

இந்திய அரசியலில் 'ஆயா ராம், கயா ராம்' கலாச்சாரம்

இந்திய அரசியலைப் பொறுத்தவரை இந்த வார்த்தை முன்பு பிரபலம் இல்லை. 1967-ஆம் ஆண்டு ஹரியானா சட்டமன்ற உறுப்பினர் கயா லால் என்பவர் ஒரே நாளில் மூன்று முறை கட்சி மாறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதிலிருந்து அவரை பெயரை வைத்து.. இந்திய அரசியலில் ஆயா ராம், கயா ராம் (Aaya Ram, Gaya Ram) என்ற கலாச்சாரம் உருவானது. இதனால் தொடக்க காலத்தில் இந்த வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதன்பின், பெரும்பான்மையை நிரூபிக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ எம்எல்ஏக்களுக்குப் பணமோ, அமைச்சர் பதவியோ கொடுத்து இழுக்கும்போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'குதிரை பேரம்' என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கத்திற்கு வந்தது. முக்கியமாக பாஜகவின் ஆப்ரேஷன் தாமரை நடவடிக்கைகளுக்கு பின் இது அதிகம் ஆகிவிட்டது. இப்போது இந்திய ஊடகங்களிலும் குதிரை பேரம் என்ற சொல்லே இயல்பான ஒன்றாக இடம்பிடித்துவிட்டது.

சுருக்கமாகச் சொன்னால், குதிரைச் சந்தையில் குதிரைகளின் தரம் மறைக்கப்பட்டு எப்படி வியாபாரம் நடத்தப்பட்டதோ, அதேபோல் அரசியலிலும் மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள், தங்களின் கொள்கைகளை மறைத்துவிட்டுப் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகும் அவல நிலையைச் சுட்டிக்காட்டவே குதிரை பேரம் என்ற வரலாற்றுச் சொல் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+