"மேடம் தூங்குறாங்க! எழுப்ப முடியாது" விமான கடத்தலின்போது பாகிஸ்தான் சொன்ன பதில்! அதிர்ந்த சிங்கப்பூர்
சிங்கப்பூர்: நமது அண்டை நாடான பாகிஸ்தானில் அரசியல் தலைவர்கள் எந்த லட்சணத்தில் செயல்படுவார்கள் என்பதை உணர்த்தும் வகையில் சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹாரி கவுசிகன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது விமானம் கடத்தப்பட்டதாகப் பாகிஸ்தானின் பெனாசிர் புட்டோவை தொடர்பு கொண்டபோது, அவர் தூங்குவதால் எழுப்ப முடியாது என்ற அலட்சியமான பதில் வந்ததாகக் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன் விமானம் கடத்தப்பட்டது. 114 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் ஏர்பஸ் A310 ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நான்கு பாகிஸ்தானியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. கத்திகள், லைட்டர்கள் உடன் அவர்கள் விமானத்தை கடத்தினர்.

விமான கடத்தல்
முதலில் விமானத்தை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினர். இருப்பினும், ஆஸ்திரேலியா வரை செல்ல தேவையான எரிபொருள் விமானத்தில் இல்லாததால்.. எரிபொருள் நிரப்புவதற்காகச் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது நடந்த சில சம்பவங்கள் குறித்த தகவல்களைத் தான் சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹாரி கவுசிகன் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச மாநாடு ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் இப்போது எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்துப் பேசினார். மேலும், பாகிஸ்தானின் சிக்கல்களுக்கு அந்நாட்டின் புவியியல் அமைப்பு மட்டுமே காரணம் அல்ல என்றும் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக தவறுகளும் முக்கிய காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாகிஸ்தானின் அரசியல்வாதிகள், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டுக்குப் பயனில்லை. ராணுவமும் அந்தப் பிரச்சினையின் முக்கிய அங்கமாக உள்ளது. உதாரணத்திற்கு 1991 கடத்தல் சம்பவத்தைச் சொல்கிறேன். அப்போது நான் வெளியுறவுத்துறையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். இதனால் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடத்தல்காரர்களின் கோரிக்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பெனாசிர் புட்டோவுடன் பேச வேண்டும் சொன்னார்கள். அந்த நேரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவி இருந்தார். பெனாசிர் புட்டோ இஸ்லாமாபாத்தில் இல்லாமல், சிந்து மாகாணத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் இருந்தார்.
மேடம் தூக்குகிறார்
அப்போது பாகிஸ்தான் உயர் ஆணையர் உதவியுடன், அதிகாலை 3 மணி அளவில் பெனாசிர் புட்டோவின் இல்லத்தைத் தொடர்பு கொண்டேன். வீட்டில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் உருது மொழி மட்டுமே பேசினர். இதனால் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை லைனில் பிடிக்க டைம் ஆனது.
விமான கடத்தல்காரர்கள் பெனாசிர் புட்டோவுடன் பேசினால் சரணடையத் தயாராக இருப்பதாகவும்.. இல்லையெனில் பயணிகளைக் கொல்ல தொடங்கிவிடுவார்கள் என பொறுமையாக விளக்கினேன். ஒரு முறை இல்லை.. அதுவும் மூன்று முறை விளக்கினேன். . அதற்கு எதிர்முனையில் இருந்த நபர், "மேடம் தூங்கிக்கொண்டிருக்கிறார்... அவரை தொந்தரவு செய்ய முடியாது என்று கூறிவிட்டுக் கட் செய்துவிட்டார்.. இப்படி தான் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்" என்றார்.
அதிரடி ஆபரேஷன்
கடத்தலின்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இரவு நேரத்தில் சிங்கப்பூர் சிறப்புப் படையினர் விமானத்தை முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். விமானத்தின் கதவுகளை வெடிவைத்துத் திறந்து, மயக்க மருந்து குண்டுகளை வீசிய அவர்கள், சில நிமிடங்களில் நான்கு கடத்தல்காரர்களையும் சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கடத்தல் குறித்து கவுசிகன் மேலும் கூறுகையில், "விமானத்தைக் கடத்தியவர்களின் கோரிக்கை என்ன என்பது இன்று வரை முழுமையாகத் தெரியவில்லை. ஏனெனில், கடத்தல்காரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் அரசியல் அமைப்பில் அமைப்பில் உள்ள பிரச்சினையையே காட்டுகிறது" என்றார்.














Click it and Unblock the Notifications