2 நாள்தான் டைம்.. உடனே கிளம்புங்க! அமீரகம் உத்தரவு.. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு சிக்கல்
துபாய்: சுற்றுலா, வேலை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் பேர் அமீரகத்திற்குச் செல்கிறார்கள். இந்தியர்களுக்கு, அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்கள் கணிசமான அளவுக்கு அமீரகம் செல்கிறார்கள். இதற்கிடையே 2026ல் அமீரக அரசு விசா மற்றும் குடியிருப்பு அனுமதி தொடர்பாகப் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும் அமீரகம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, சுற்றுலா என பல காரணங்களுக்காக இந்தியர்கள் அமீரகம் செல்கிறார்கள். இதற்கிடையே இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரையும் பாதிக்கும் வகையில் விசா முறையில் அமீரக அரசு சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

விசா ஆன் அரைவல்
முதலில் அமீரகம் தனது 14 நாள் மற்றும் 60 நாள் விசா ஆன் அரைவல் (Visa on Arrival) வசதியை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்தது. இப்போது இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிப்பவர்களுடன், தற்போது சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் செல்லுபடியாகும் ரெசிடன்சி பெர்மிட் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறலாம்.
சுற்றுலா விசா
துபாய்க்கு சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏஜெண்டுகள் அல்லது GDRFA மூலம் விண்ணப்பித்தால், 30 அல்லது 60 நாட்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாவை வெறும் 48 மணி நேரத்திலேயே பெற முடியும் என்று துபாய் அறிவித்துள்ளது. இதன் மூலம் துபாய் சுற்றுலா செல்வோர் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
முதலீட்டாளர் விசா
முதலீட்டாளர்களுக்கான 2 ஆண்டு குடியிருப்பு விசா விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் 7.5 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள சொத்தை வாங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது அந்த குறைந்தபட்ச மதிப்பு நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சொத்து முழுமையாக ஒருவரின் பெயரில் இருக்க வேண்டும். அப்போது தான் முதலீட்டு விசா கிடைக்கும். கூட்டாக சொத்து வாங்கியிருந்தால், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் குறைந்தபட்சம் 4 லட்சம் திர்ஹம் மதிப்பிலான பங்கு இருக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
உடனே வெளியேறணும்
சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வான்வெளி மூடல் மற்றும் விமான சேவை பாதிப்புகள் காரணமாக, விசா காலம் முடிந்தும் அமீரகத்தில் தங்கியிருந்த சிலருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இப்போது நிலைமை சீரடைந்துள்ளதால், இதுபோல விசா காலம் கடந்தும் தங்கியிருப்போர் வெளியேற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜூலை 9ஆம் தேதிக்குள் விசாவை புதுப்பிக்க வேண்டும் அல்லது நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் மெடிக்கல் விசா
மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக ஸ்மார்ட் மெடிக்கல் விசா 'Smart Medical Visa'** திட்டத்தையும் துபாய் அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விசா, மருத்துவ சிகிச்சை, குடியிருப்பு அனுமதி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒருவர் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
விசா நிறுத்தம்
எபோலா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மக்களுக்கு புதிய விசா வழங்குவதை அமீரகம் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தடை ஜூன் 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாடுகளில் எபோலா பரவல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications