வீட்டில் ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூம் போனால் அடுத்த மாநிலம்! இந்திய வரைபடத்தில் இப்படி ஒரு வீடா?
மும்பை: நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள்.. உங்கள் அறையில் இருந்து திடீரென சமையல் அறைக்கு சென்றால் அது வேறு மாநிலமாக இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? அதாவது உங்கள் வீட்டின் ஒரு அறை ஒரு மாநிலத்திலும்.. இன்னொரு அறை இன்னொரு மாநிலத்திலும் இருக்கிறது என்றால் என்று கூறினால் நம்ப முடியுமா? அப்படி ஒரு வீடு நிஜமாகவே உள்ளது!
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு விசித்திரமான வீடு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே எல்லைக் கோடுகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை எல்லைக்கோடுகள் என்போம்.

ஆனால், ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள்ளேயே மாநில எல்லைக் கோடு கடந்து சென்றால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா! அப்படி ஒரு வீட்டை பற்றித்தான் நீங்கள் இங்கே பார்க்க போகிறீர்கள்!
மகாராஷ்டிராவில் உள்ள மகாராஜ் குடா என்ற கிராமத்தில் வசிக்கும் பவார் குடும்பத்தின் வீடு அப்படி ஒரு இடத்தில்தான் உள்ளது. உத்தம் பவார் மற்றும் சந்து பவார் ஆகிய இரு சகோதரர்களுக்குச் சொந்தமான 10 அறைகள் கொண்ட ஒரு பெரிய வீடு, இந்திய வரைபடத்தில் இரண்டு மாநிலங்களுக்கு நடுவே சரியாகப் பிரிந்து நிற்கிறது.
வீட்டிற்குள் இருக்கும் மாநில எல்லை
இந்த வீட்டின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், சமையலறை ஒரு மாநிலத்திலும், படுக்கையறை மற்றொரு மாநிலத்திலும் அமைந்துள்ளது. அதாவது, இந்த 10 அறைகள் கொண்ட வீட்டின் நான்கு அறைகள் தெலுங்கானா மாநில எல்லைக்குள்ளும், மற்ற நான்கு அறைகள் மகாராஷ்டிர மாநில எல்லைக்குள்ளும் வருகின்றன. நீங்கள் அடிக்கடி செய்தி படிப்பவர் என்றால்.. மகாராஷ்டிரா - தெலுங்கானா இடையே எல்லை பிரச்சனை இருப்பது தெரிந்திருக்கும்.. பல இடங்களில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது.
அப்படி ஒரு எல்லை பிரிவினை இருக்கும் இடத்தில்தான் இந்த வீடும் இருக்கிறது. இங்கு வாழும் குடும்பத்தினர் காலையில் எழுந்து படுக்கையறையிலிருந்து சமையலறைக்குச் சென்று ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்றால், அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைய வேண்டும். ஆனால் கவலை வேண்டாம் இதற்காக அவர்கள் ஸ்பெஷல் பர்மிஷன் எல்லாம் வாங்க வேண்டியது இல்லை.
ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்வதற்கே அவர்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டிய ஒரு விசித்திரமான சூழல் இங்கு நிலவுகிறது.
இரண்டு மாநிலங்களுக்கும் வரி செலுத்தும் குடும்பம்
இந்த விசித்திரமான அமைப்பிற்குப் பின்னால் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மகாராஷ்டிரா-தெலுங்கானா எல்லைப் பிரச்சனைதான் முக்கியக் காரணம். இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவும் எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாததால், இந்த வீடு இரண்டு மாநிலங்களின் எல்லையிலும் ஒரே நேரத்தில் உள்ளது.
இதன் விளைவாக, பவார் குடும்பத்தினர் தங்களது ஒரே வீட்டிற்கு மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநில அரசுகளுக்கும் தனித்தனியாக சொத்து வரி செலுத்தி வருகிறார்கள்.
நிறைய பலனும் இருக்கிறது
அரசு நடைமுறைகளும் வரிகளும் இவர்களுக்கு இரட்டிப்புச் சுமையாக இருந்தாலும், இதனால் இவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் சற்றும் குறைவில்லை. பவார் குடும்பத்தினர் தங்களது வாகனங்களை இரண்டு மாநிலங்களிலுமே பதிவு செய்து வைத்துள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநில அரசுகளும் வழங்கும் குடிநீர் திட்டங்கள், இலவச மின்சாரத் திட்டங்கள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இந்த ஒரே குடும்பம் சட்டப்பூர்வமாகப் பெற்றுப் பயனடைந்து வருகிறது. இரு மாநில எல்லைகளுக்கு நடுவே சிக்கியிருந்தாலும், இரண்டு மாநிலங்களின் சலுகைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பமாக இவர்கள் உள்ளனர். இந்த விசித்திரமான வீடு தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.














Click it and Unblock the Notifications