முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆறாவது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-6) முடிவுகள், தமிழ்நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கடந்த 2019-21 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஐந்தாவது ஆய்வறிக்கையுடன் (NFHS-5) ஒப்பிடுகையில், தற்போதைய புதிய தரவுகள் தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது.

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த புதிய ஆய்வறிக்கையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப பிரிவில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதுதான். தமிழ்நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் ஒட்டுமொத்த விகிதம் கடந்த NFHS-5 கணக்கெடுப்பில் 14.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய NFHS-6 ஆய்வில் அது 16.3 சதவீதமாகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களை (16.1%) விட, நகர்ப்புறங்களில் முதியவர்களின் எண்ணிக்கை 16.6 சதவீதம் என்ற அளவில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
பிறப்பு விகிதம்
மறுபுறம், தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டும் விதமாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகை விகிதம் 6.7 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் 21.0 சதவீதத்திலிருந்து 20.2 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது.
இதோடு தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.8 அளவீட்டில் இருந்து 1.7 ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் தமிழ்நாடு அதிகப்படியான முதியவர்களைக் கொண்ட ஒரு மாநிலமாக மாறவுள்ளதை இந்தத் தரவுகள் தெளிவாக எச்சரிக்கின்றன.
ப்ரீ ஸ்கூல் மற்றும் பெண்களின் கல்வி நிலை
தமிழகத்தின் கல்வி மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், முறையான முன்பள்ளிக் கல்விக்கு (Pre-school) செல்லும் குழந்தைகளின் ஒட்டுமொத்த விகிதம் கடந்த ஆய்வில் 46.1 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போதைய புதிய கணக்கெடுப்பில் அது 65.3 சதவீதம் என்ற அளவிற்கு அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நகர்ப்புற குழந்தைகளை (63.7%) விட, தமிழகக் கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகள் 66.5 சதவீதம் என்ற அளவில் மிக அதிக அளவில் முன்பள்ளிக்குச் சென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களின் ஒட்டுமொத்த பள்ளிப் படிப்பு விகிதம் 80.4 சதவீதம் என்ற முந்தைய ஆண்டின் அதே சிறப்பான நிலையில் தொடர்ந்து நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 86.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 75.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
வங்கி கணக்குகள் உயர்வு
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் மற்றும் நிதிசார்ந்த உள்கட்டமைப்புகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு வழக்கமான உறுப்பினரின் பெயரில் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு (Bank/Post office account) வைத்துள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த விகிதம் 96.6 சதவீதத்திலிருந்து 97.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதிலும் நகர்ப்புறங்களை (96.4%) விடக் கிராமப்புறங்களில் 98.0 சதவீதம் குடும்பங்கள் வங்கி கணக்குகளைப் பெற்று நிதி உள்ளடக்கத்தில் முன்னிலையில் உள்ளன.
மருத்துவக் காப்பீடு
ஆனால், அதே சமயம் தமிழகக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு (Health Insurance) திட்டப் பாதுகாப்பு கடந்த முறையை விடக் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆய்வில் 66.5 சதவீதக் குடும்பங்கள் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அது 61.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வெறும் 56.7 சதவீதக் குடும்பங்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு பெற்றுள்ள வேளையில், கிராமப்புறங்களில் 64.7 சதவீதம் குடும்பங்கள் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்றுள்ளன.
அடிப்படை உள்கட்டமைப்பில் அசைக்க முடியாத தமிழகம்
அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு எப்போதும் போல தனது முதன்மையான இடத்தை அசைக்க முடியாமல் தக்கவைத்துள்ளது.
தமிழகத்தில் மின்சார வசதி கொண்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த விகிதம் 99.3 சதவீதம் கொண்டுள்ளது. அதேபோல, மேம்படுத்தப்பட்ட தூய்மையான குடிநீர் வசதி (Improved drinking-water source) பெறும் மக்களின் விகிதம் 98.5 சதவீதமாக உள்ளது.
அயோடின் கலந்த உப்பை (Iodized salt) பயன்படுத்தும் குடும்பங்களின் விகிதம் 92.0 சதவீதத்திலிருந்து 92.8 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. மேலும், சொந்தமாக வீடோ அல்லது நிலமோ (தனித்து அல்லது கூட்டாக) வைத்துள்ள பெண் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களின் ஒட்டுமொத்த விகிதம் 17.2 சதவீதம் என்ற முந்தைய கணக்கெடுப்பின் அதே அளவில் தற்பொழுதும் நீடிக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, தனது முதியவர்களின் தேவைகளுக்கான திட்டங்களையும், மருத்துவக் காப்பீட்டு விழிப்புணர்வையும் இனி வரும் காலங்களில் கூடுதல் கவனத்துடன் மேம்படுத்த வேண்டும் என்பதை இந்த NFHS-6 அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications