சீட்டு கட்டாய் சரிந்த திமுக கூட்டணி..ஸ்டாலின் திரும்பிப் பார்த்தா யாருமே இல்லை! உள்ளாட்சித் தேர்தல்?
சென்னை: தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த கட்சிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறுவதாக அறிவித்திருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்களும் வெளியேறியுள்ள நிலையில், தற்போதைக்கு தேமுதிக, மநீம இன்னும் சில அமைப்புகள் மட்டுமே கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிகள் வேகமாக மாறி வருகின்றன. தேர்தலில் ஆட்சியை இழந்த திமுக, தற்போது தனது பழைய கூட்டணி பலத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் சவால்களை சந்தித்து வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
அந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியில் தொடர்வது சாத்தியமில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையேயான உறவு மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
திமுக
கடந்த பல தசாப்தங்களாக இரு கட்சிகளும் பல்வேறு தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டு வந்துள்ளன. 1999 முதல் 2003 வரை திமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த காலத்தைத் தவிர, பெரும்பாலான காலகட்டங்களில் முஸ்லிம் லீக் திமுகவுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது. அந்த வகையில் சுமார் 60 ஆண்டுகளாக நீடித்த நட்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல்
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே திமுக கூட்டணியில் அதிர்வுகள் தொடங்கியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி முதலில் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினர்.
கொள்கை கூட்டணி
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் மதிமுகவும் கூட்டணியில் இருந்து விலக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் தமிழகத்தில் மிக வலுவான கூட்டணி அமைப்பை கொண்ட கட்சியாக திமுக பார்க்கப்பட்டது. "கொள்கை கூட்டணி" என்ற அடையாளத்துடன் பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைத்து வந்தது.
கூட்டணி அரசியல்
ஆனால் தற்போதைய சூழலில் அந்த கூட்டணியின் முக்கிய தூண்களாக இருந்த பல கட்சிகள் வெவ்வேறு அரசியல் பாதைகளை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்கால தேர்தல்களில் திமுக எந்த வகையான கூட்டணியை உருவாக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் நிபுணர்களின் கருத்துப்படி, கூட்டணி கட்சிகளின் வெளியேற்றம் என்பது வெறும் எண்கள் அடிப்படையிலான இழப்பு மட்டுமல்ல. அது குறிப்பிட்ட சமூக மற்றும் வாக்காளர் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தேமுதிக, மநீம
தற்போதைய நிலையில் தேமுதிக, மநீம, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே திமுக அணியில் தொடர்கின்றன என்று கூறப்படுகிறது.
அதேநேரம் தேமுதிக இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவும் திமுக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். தமிழகத்தில் விரைவில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள், தமிழக அரசியில் கட்சிகளுக்கு முதல் சோதனையாக அமையலாம்.
தமிழக அரசியல்
இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு குறைந்து வரும் நிலையில், திமுக தனித்து களம் காணுமா அல்லது புதிய கூட்டணியை உருவாக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நீண்டகாலமாக தமிழக அரசியலில் கூட்டணி தலைமையாக இருந்த திமுக, தற்போது புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications