மொத்தமே 20 நிமிடம் தான்.. வந்த வேகத்தில் கிளம்பிய அகிலேஷ்- காங்கிரஸ் தலைவர்கள்! என்ன நடந்தது
டெல்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இரு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டம் வெறும் 20 நிமிடங்களில் முடிவடைந்தாலும், இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடைபெறும் நிலையில், அங்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க முயலும் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் உடன் கைகோர்த்துள்ளார். இந்த சூழலில் தான் கூட்டணி தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

3 நாட்களில் பேச்சுவார்த்தை முடியும்
தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்த முக்கியத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்னும் 2 முதல் 3 நாட்களில் கூட்டணி உடன்பாடு எட்டப்படும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெறும் 20 நிமிடங்கள்
தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் இதுவரை திரைமறைவில் ஆலோசித்து வந்த நிலையில், இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வ குழுக்கள் நேரில் சந்தித்து பேசின. இது பல மணி நேரம் நடக்கும். காரசார விவாதம் இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.20 மணிக்கு நிறைவடைந்தது. வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத்தில், எத்தனை தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆனால், எந்தெந்த தொகுதிகளில் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பான டேட்டாவை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர். கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தொகுதிகளில் உள்ள சாதிய வாக்குகள், உள்ளூர் கட்சி அமைப்புகளின் பலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சமாஜ்வாதி கருதும் சில தொகுதிகள் தொடர்பான டேட்டாவையும் அக்கட்சி வழங்கியுள்ளது.
சமாஜ்வாதி
இந்த கூட்டத்துக்கு முன்பாக இரு கட்சி பிரதிநிதிகளும் தங்களது தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தின. காங்கிரஸ் குழுவினர் மூத்த தலைவர் பிரமோத் திவாரியின் இல்லத்தில் சந்தித்து, ஏற்கெனவே சமாஜ்வாதி தலைமையிடம் வழங்கிய 172 தொகுதிகள் அடங்கிய பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் உண்மையாகவே எத்தனை தொகுதிகளில் வெல்ல முடியும் என்ற லிஸ்ட்டை காங்கிரஸ் ரெடி செய்து வைத்தது.
மறுபுறம், சமாஜ்வாதி கட்சியினர் ராம் கோபால் யாதவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டணிக்கு எந்தெந்த தொகுதிகளில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது, காங்கிரஸுக்கு எந்த இடங்களை ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடந்தது.
நாளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
கூட்டத்துக்கு பிறகு பேசிய சமாஜ்வாதியின் ராம் கோபால் யாதவ், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக தெரிவித்தார். இரு கட்சிகளும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை போகும் வேகத்தை பார்த்தால் இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தால் முஷ்டியை முறுக்கும் காங்கிரஸ், இந்த முறை அப்படி எதுவும் செய்யவில்லை. தனது பலத்தை புரிந்துள்ள காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றதாக கூறியுள்ளது. சமாஜ்வாதி கொடுத்த லிஸ்ட்டை ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
