இலவசமாக கிடைத்த தண்ணீரை காசு கொடுத்து வாங்க வைத்த பிஸ்லெரி.. இப்போது அதே நிறுவனத்துக்கு வந்த சோதனை!
டெல்லி: இந்தியாவில் ஒரு காலத்தில் குடிநீர் என்றால் தண்ணீர் பந்தல்கள், மண்பானைகள் என இலவசமாக கிடைக்கும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று வெளியே செல்லும்போதகு தண்ணீர் வேண்டும் என்றால் பாட்டிலை விலைக்கு வாங்க வேண்டிய நிலை. இந்த மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபர் மட்டும் காரணமில்லை என்றாலும் பிஸ்லெரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது..
இந்தியாவில் பலர் வேறு நிறுவனங்களின் பாட்டில் குடிநீரைக்கூட பொதுவாக பிஸ்லெரி என்றே அழைக்கும் அளவுக்கு இந்த பிராண்ட் பிரபலமாகியுள்ளது. இத்தகைய நம்பிக்கையை பெற்ற நிறுவனத்தின் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் பிறந்த பிஸ்லெரி
பிஸ்லெரியின் வரலாறு இந்தியாவில் தொடங்கவில்லை. இத்தாலியை சேர்ந்த ஆய்வாளரும் தொழிலதிபருமான பெலிஸ் பிஸ்லெரி, இரும்பு உப்புகள் மற்றும் குயினைன் கலந்த 'ஃபெர்ரோ-சைனா பிஸ்லெரி' என்ற மருத்துவ டானிக்கை உருவாக்கினார். 1851ஆம் ஆண்டு பிறந்த அவர், இந்த பானத்தை மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே முதலில் விற்பனை செய்தார்.
பின்னர் 1894ஆம் ஆண்டு இத்தாலியின் உம்ப்ரியா பகுதியில் உள்ள ஏஞ்சலிகா நீரூற்றிலிருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தொடங்கினார். 1500களிலிருந்தே இந்த நீரூற்றில் உள்ள நீர் மருத்துவ காரணங்களுக்காக பருகப்பட்டு வந்தது. 1921ஆம் ஆண்டு பிஸ்லெரி மறைந்த பிறகு, அவரது குடும்ப மருத்துவர் டாக்டர் சிசேர் ரோஸ்ஸி நிறுவனத்தை கவனித்து வந்தார்.
வெறும் ரூ.4 லட்சம்
இந்தியாவில் 1965ஆம் ஆண்டு மும்பை அருகே தானே பகுதியில் குஷ்ரூ சன்டூக் முதல் பிஸ்லெரி குடிநீர் ஆலையைத் தொடங்கினார். அப்போது கண்ணாடி பாட்டில்களில் 'பப்ளி', 'ஸ்டில்' என இரண்டு வகைகளில் தண்ணீர் விற்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு ரமேஷ் சவுகானின் பார்லே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இத்தாலிய உரிமையாளர்களிடமிருந்து வெறும் ரூ.4 லட்சத்துக்கு பிஸ்லெரியை வாங்கியது.
ஆனால், அப்போது சவுகான் சகோதரர்களின் கவனம் குடிநீரில் இல்லை. 5 ஸ்டார் ஹோட்டல்களில் பிஸ்லெரி சோடாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சோடாவுக்காகவே அவர்கள் பிஸ்லெரியை வாங்கியிருந்தனர். 1993ஆம் ஆண்டு கோல்டு ஸ்பாட், சிட்ரா, மாஸா, தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட கூல் டிரிங்ஸ் பிராண்டுகளை கோகோ கோலாவுக்கு விற்ற பிறகுதான், பிஸ்லெரியின் குடிநீர் பிஸ்னஸில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தது.
விளம்பரங்கள்
"இலவசமாக கிடைக்கும் தண்ணீரை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்.." இதுவே மக்களின் மனதில் முதலில் இருந்த கேள்வி. இதை மாற்றுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. குடிநீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம், தண்ணீரை சுத்திகரித்து குடிக்க வேண்டிய அவசியம் விளம்பரங்கள் மூலம் விளக்கப்பட்டன. அவை மக்களிடையே கவனம் பெற்றது. அப்போது தான் 1991ஆம் ஆண்டு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 20 லிட்டர் கேன்களை அறிமுகப்படுத்தியது.
அடுத்து 1995ஆம் ஆண்டு வெறும் ரூ.5 விலையில் 500 மில்லி பாட்டிலை அறிமுகப்படுத்தியது பிஸ்லெரிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் பெரிய பாட்டில்களை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லாமல் போனது. தேவைக்கேற்ப குறைந்த அளவு தண்ணீரை வாங்க முடிந்தது. 2000ஆம் ஆண்டு 1.2 லிட்டர் பாட்டிலும் அறிமுகமானது.
அதிகரிப்பு
நகரமயமாக்கல், பயணங்களின் அதிகரிப்பு, குடிநீரின் தரம் குறித்த விழிப்புணர்வு, நீரால் பரவும் நோய்கள் குறித்த அச்சம் ஆகியவை பாட்டில் தண்ணீருக்கான மார்கெட்டை விரிவுபடுத்தின. 2006ஆம் ஆண்டு நீல நிற பேக்கேஜிங்கிலிருந்து இப்போது இருக்கும் பச்சை கலர் வித்தியாசமான டிசைனுக்கு மாறியது. இதன் மூலம் கின்லி, அக்வாஃபினா போன்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்த அடையாளத்தை உருவாக்கியது.
இன்று இந்தியாவில் 130க்கும் மேற்பட்ட ஆலைகளை கொண்டுள்ள பிஸ்லேரி, 200 மில்லி பாட்டில்கள் முதல் 20 லிட்டர் கேன்கள் வரை விற்பனை செய்கிறது. சோடா பிஸ்னஸிம் லாபகரமாகவே இருக்கிறது. மேலும், வேதிகா என்ற பிரீமியம் குடிநீர் பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய பாட்டில் குடிநீர் மார்கெட்டில் பிஸ்லெரியின் பங்கு 32 முதல் 35 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
இப்போதைய நிலை
ஆனால், இப்போது அந்த பிராண்டின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியுள்ளது. 2025 செப்டம்பரில் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதி குடிநீரில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியதாகவும், மேல்முறையீட்டு ஆய்வகத்தில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டதாகவும் உணவு தர அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள பிஸ்லேரி, ஆறு மாதிரிகளில் ஒன்றில் மட்டுமே சிக்கல் இருந்ததாகவும் அதை மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்தபோது புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும் கூறுகிறது.
ஒரு காலத்தில் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலையும் பிஸ்லெரி என்று நம்பிய மக்களிடம், இன்று தனது பாட்டில்கள் பாதுகாப்பானது என்பதை அந்த நிறுவனமே விளக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இலவசமாக கிடைத்த தண்ணீரை விலைக்கு வாங்கும் பழக்கத்தை உருவாக்கிய பிராண்டுக்கு, இப்போது மக்களின் நம்பிக்கையை தக்கவைத்து கொள்வதே மிக பெரிய சவாலாக மாறியுள்ளது.




Click it and Unblock the Notifications
