43 நாட்களாகியும் செஞ்சி ஹேமலதா எங்கே? ஆடுகளுடன் வருவாளே.. மகளை நினைத்து ரோட்டையே பார்க்கும் தாய்
விழுப்புரம்: 43 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி ஹேமலதா.. மகளை எப்படியாவது மீட்டுக் கொடுத்துவிடுங்கள் என்று அவரது தாய் பவானி கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். "என் பிள்ளையை கொண்டு வந்து விட்டால் யாரையும் குற்றவாளியாக பார்க்க மாட்டோம்.. எங்களுக்கு குழந்தை கிடைத்தால் அதுவே போதும்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், 43 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், இப்போது அவரது குடும்ப பின்னணியை மையமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, விசாரணை சிறுமியின் அப்பா வடிவேலு பக்கம் திரும்பியுள்ளதாம்.

செஞ்சி 7 வயது சிறுமி ஹேமலதா
வடிவேலு ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார்,. இவர் தனது மூத்த மகளின் திருமணத்துக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றும், 10 ஆடுகளை தவிர வீட்டில் வேறு எதுவும் இல்லை, அதனால் திருமணத்தை தள்ளிப்போடலாம் என்று மனைவி பவானியிடம் சொன்னாராம்..
ஆனால் பவானி, திருமணத்தை நடத்துவதிலேயே உறுதியாக இருந்ததாகவும், இதனால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆடு மேய்க்கும் அப்பா வடிவேலு
அதுமட்டுமல்ல, சிறுமி காணாமல் போன அன்றே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதும், அதற்கு ரூ.5,000 செலவு செய்யப்பட்டதும், அந்த பணத்தை ஊரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்ததாக சிலர் சொல்வதும் போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வடிவேலு பங்கேற்காதது குறித்தும், வடிவேலு மற்றும் பவானி அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருப்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், பவானிக்கு நெருக்கமானவர்கள், வடிவேலுவுடன் உள்ள உறவு, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
தாய் பவானி கண்ணீருடன் பேட்டி
இதற்கிடையே, ஹேமலதா மாயமாகி இன்றோடு 43 நாட்கள் ஆகியும் இதுவரை கிடைக்காத நிலையில் அவரது தாய் பவானி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். அதில், "என் பிள்ளையை யார் தூக்கி சென்றிருந்தாலும் அவர்கள் கையில் காலில் விழுந்து தயவு செய்து கேட்கிறேன், எங்காவது கொண்டு வந்து விட்டுவிட்டு போய்விடுங்கள், மறைமுகமாக கொண்டு வந்து இதுதான் அவர்கள் வீடு, இதுதான் அவர்கள் ஊர் என்று சொல்லி விட்டுவிட்டு போகச் சொல்லுங்கள்.
உயிரை கையில் ஏந்தி கும்பிட்டு கேட்கிறேன், என் பிள்ளையை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தால் ரொம்ப நன்றியாக இருக்கும், நாங்கள் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம், என் பிள்ளை வந்த சந்தோஷமே எங்களுக்கு போதும், கிடைத்த வரைக்கும் போதும், யாரையும் நாங்கள் குற்றவாளியாக பார்க்கவில்லை, என் பிள்ளையை கொண்டு வந்து விட்டால் அதுவே எங்களுக்கு ரொம்ப நன்றி.
ஆதாரம் கிடைக்கவில்லை
போலீஸ் விசாரணை குறித்து கேட்டபோது, விசாரிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாரம் கிடைக்க வேண்டும் என்று விசாரிக்கிறார்கள், இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, அவர்கள் மீதும் குற்றம் சொல்வதற்கு எங்களுக்கு தகுதியும் கிடையாது, வழியும் கிடையாது, ஏனென்றால் எங்களுக்கே எப்படி போனது என்று சொல்ல தெரியவில்லை, அவர்களுக்கும் தெரியாது, முழித்துக் கொண்டிருக்கிறார்கள்,
சின்ன ஒரு வழி கிடைத்தால் அதை வைத்து போகலாம் என்று பார்க்கிறார்கள், எந்த வழியும் அவர்களுக்கும் கிடைக்கவில்லை, அதனால் எங்களையே சுற்றி சுற்றி வருகிறார்கள், எங்களுக்கு தெரிந்த அளவுக்கு நாங்கள் உண்மையை சொல்லிவிட்டோம், இதற்கு அப்புறம் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.
43 நாட்களாகிவிட்டது
43 நாட்களாக குழந்தையை பிரிந்துள்ளோம்.., மனசு ரொம்ப வேதனையாகதான் இருக்கிறது, நாங்கள் ரொம்ப நொந்து நூலாக இருக்கிறோம், ஒருவேளை சாப்பிடுவதும், ஒருவேளை பட்டினியாக இருப்பதும், ரொம்ப கவலையாக, ரொம்ப வேதனையோடு இருக்கிறது, எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, தூங்க முடியவில்லை, படுக்க முடியவில்லை,
இப்படி போனால் என் பிள்ளை கூட வருவாளே, இப்படி வந்தால் எப்படி வருவாள் என்று நினைத்து நினைத்து அழுகிறேன், ஆடுகளை ஓட்டிட்டு போனால் ஆட்டோடு கூட வருவாள், மாடு ஓட்டி போனால் மாட்டோடு கூட வருவாள் என்று போகிற வழியெல்லாம் நினைத்து நினைத்து அழுகிறேன், என் பிள்ளை எப்போது வருவாள் என்று நினைத்து ரோட்டை பார்த்துக் கொண்டு நடக்கிறேன், இரவில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன்,
ஆஞ்சநேயரை நம்புகிறேன்
நான் அந்த ஆஞ்சநேயரை தான் நம்புகிறேன், இதுவரை எல்லா தெய்வத்தையும் கூப்பிட்டேன், எந்த தெய்வமும் எங்களுக்கு துணை கை தூக்கி விடவில்லை, இப்போது கிடைத்தால் ஆஞ்சநேயரிடம் தான் ஒப்படைத்திருக்கிறேன், அதுவாவது என்னை கை தூக்கி விடுமா, இல்லை விட்டுவிடுமா என்று தெரியாது, கடைசியாக அதுதான் எங்களுக்கு தெய்வமும் காப்பாற்றுமா இல்லை என்ன செய்யும் என்று எங்களுக்கும் தெரியவில்லை.
43 நாளாக உள்ளே இருக்கிறோம், எங்களுக்கே எதுவும் வழி இல்லை, உள்ளே உட்கார்ந்திருக்கிறோம், எந்த கோரிக்கை வைத்தாலும் வந்து வந்து பார்த்துவிட்டு ஆறுதல் தான் சொல்கிறார்கள், அவர்களும் என் பிள்ளையை தேடி கொடுத்த பாடு இல்லை, நாங்கள் யாருக்கு எந்த கோரிக்கை வைத்து நாங்கள் என்ன செய்வது?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்.





Click it and Unblock the Notifications
