செஞ்சி சிறுமி மாயம்.. புதிய ஸ்டைலை கையில் எடுத்த சிபிசிஐடி.. அந்த 8 கோணங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சி சிறுமி வழக்கில் 8 முக்கியக் கோணங்களில் சிபிசிஐடி தனிப்படையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து 41 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அக்டோபர் 12 அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

gingee villupuram

முதலில் உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் துப்பு துலங்காததால், அக்டோபர் 21-ம் தேதி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்ததைத் தொடர்ந்து, தற்போது 8 முக்கியக் கோணங்களில் சிபிசிஐடி தனிப்படையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

41 நாட்களாகியும் அவிழாமல் இருக்கும் இந்த மர்ம முடிச்சை உடைக்க, சிபிசிஐடி கையில் எடுத்துள்ள அந்த 8 முக்கியக் கோணங்கள் இதோ..

1. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வாக்குமூல முரண்பாடுகள்

குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டின் கதவு திறந்திருந்தது எப்படி, அண்டை வீட்டாருக்குக் கேட்ட குழந்தையின் அழுகுரல் ஒரே அறையில் தூங்கிய தாய் பவானி, தந்தை வடிவேலு மற்றும் பாட்டிக்குக் கேட்காதது ஏன் என்ற கோணத்தில் தனித்தனியாக 7 முதல் 8 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உறவினர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

2. வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் தரவுகள்

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் செல்போன்கள், வங்கி கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. குழந்தை விற்பனை செய்யப்பட்டதா அல்லது ஏதேனும் பணத் தகராறு, கடன் பிரச்னை காரணமாகக் கடத்தப்பட்டாரா என்பதை அறிய யுபிஐ (UPI) மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் சல்லடை போடப்படுகின்றன.

3. எதிர்வீட்டுப் பெண்கள் மற்றும் பெங்களூரு உறவினர் கோணம்

நள்ளிரவில் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகக் கூறிய எதிர்வீட்டுப் பெண் மஞ்சுளா, அவரது மருமகள் மகேஸ்வரி, அண்டை வீட்டுப் பெண் பவானி ஆகியோரிடம் டிஎஸ்பி கீதா விசாரணை நடத்தியுள்ளார். மேலும், பிறந்தநாள் கேக் வெட்டும்போது உடனிருந்த மஞ்சுளாவின் மகன் சதீஷ் மற்றும் பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டு அன்று ஊருக்கு வந்திருந்த அவர்களது உறவினர் ஆகியோரிடமும் விழுப்புரம் அலுவலகத்தில் வைத்துத் துருவி விசாரிக்கப்படுகிறது.

4. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (ரவுடி ராஜதுரை & கூட்டாளிகள்)

ஆலம்பூண்டி மற்றும் பரதன்தாங்கல் சுடுகாடு பகுதிகளில் வசிக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் ஆகியோரைத் தனிப்படை மீண்டும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது. பழைய குற்றவாளிகளுக்கு இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தீவிரமாக ஆராயப்படுகிறது.

5. செங்கல் சூளை மற்றும் தடயவியல் சோதனை

சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள செங்கல் சூளையில் சம்பவத்தன்று இரவு பணிகள் நடந்துள்ளன. அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாமா என்ற சந்தேகத்தில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களைக் கொண்டு சாம்பல் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அறிவியல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

6. நரபலி மற்றும் மாந்திரீகக் கோணம்

கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்டை ஓடு, குங்குமம் போன்ற மாந்திரீகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த தகவல்கள் மற்றும் உள்ளூர் சாமியார் சரவணன், பூசாரி ஆகியோரின் நடமாட்டங்களை மையமாக வைத்து, மூடநம்பிக்கை அல்லது நரபலி கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7. வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில ஆட்கடத்தல் நெட்வொர்க்

கிராமத்திற்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலை சிசிடிவி காட்சிகள் மற்றும் 600 செல்போன் டவர் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவில் அவ்வழியாகச் சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், நாமக்கல் முருகன் கோவில் சிசிடிவி, புவனகிரி மற்றும் சென்னை குன்றத்தூர் ஆகிய இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளிமாவட்டக் கடத்தல் கோணமும் விசாரிக்கப்படுகிறது.

8. காப்புக்காடுகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தேடுதல் வேட்டை

சிறுமி தவறி விழுந்திருக்கலாமா அல்லது காட்டுப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில், சிறுவாடி காப்புக்காடு, முட்புதர்கள், சுடுகாடுகள் மற்றும் விவசாயக் கிணறுகளில் 4 தனிப்படைகள் பிரிந்து சல்லடை போட்டுத் தேடி வருகின்றன.

ஒருபுறம் 40 நாட்களாகியும் துப்பு துலங்காத விரக்தியில் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குள்ளேயே ஆய்வாளர் கணபதி ஹோமம் நடத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மறுபுறம் இந்த 8 கோணங்களிலும் சிபிசிஐடி தனது பிடியை இறுக்கியுள்ளது. இந்த 8 கோணங்களில் ஏதாவது ஒரு புள்ளி மிக விரைவில் செஞ்சி சிறுமி ஹேமலதா வழக்கின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+