Reusable: ரயில் தண்டவாள ஜல்லிக்கற்களை அடிக்கடி சுத்தப்படுத்தணுமாமே! தண்ணீர் ஊற்றி கழுவுவார்களா?
சென்னை: ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே கருங்கல் ஜல்லிக் கற்கள் கொட்டப்படுவது ஏன் என்பது தெரியுமா? அது போல் அந்த ஜல்லிக்கற்களை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ரயில் வண்டி என்றாலே ஆச்சரியம்தான். என்னதான் நாம் ரயில்களில் அடிக்கடி பயணித்தாலும் சலிப்பே ஏற்படாமல் புதியதொரு பயணம் போல் எப்போதும் இருக்கும். மெட்ரோ, புல்லட் ரயில் வசதிகள் இருந்தாலும் ரயிலை பார்த்ததும் மனசுக்குள் அத்தனை சந்தோஷம் கிடைக்கும். நாம் லயித்து போவதில்லாமல் நம் குழந்தைகளுக்கும் "அங்க பாரு டிரெயின்" என காட்டாமல் இருந்ததில்லை.

நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றது. நம் உடலை அலுங்காமல் குலுங்காமல் தாலாட்டுவது போல் அழைத்துச் செல்லும். இப்படிப்பட்ட ரயிலில் நிறைய கேள்விகள் நம் மனதிற்குள் எழும். அது என்ன என்பதை பார்க்கலாம்.
காந்தம் எங்கே?
ரயில் வருவதற்காக நாம் நடைமேடைகளில் காத்திருக்கும் போது இதில் நிறைய ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருக்கும். ரயில் சக்கரங்கள் பயணிக்கும் இரும்பு கம்பிகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் ரயில் தண்டவாளத்தில் காந்தம் இருக்கிறதா என்பதை நாம் தேடி பார்த்திருக்காமல் இருந்திருக்க மாட்டோம். இத்தனை ஆச்சரியங்கள் இருக்கும் நிலையில் ரயில் தண்டவாளங்களில் ஏன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. எதற்காக பட்டை பட்டையாக கான்கிரீட் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
தொழில்நுட்பங்கள்
ரயிலில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்களுக்கு Track Ballast என்ற பெயர். தண்டவாளங்களில் இவற்றை பயன்படுத்துவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. தரையின் மேலே கற்களைக் கொட்டித் தளம் அமைத்து அதன் மேலேயே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

தண்ணீரில் மூழ்கி துருப்பிடிக்காது
ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அதிக நேரம் மூழ்கி இருக்க நேர்ந்தால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கற்கள் ரயில் தடங்களை சரியான இடத்தில் வைத்திருக்கவும், தண்ணீர் அடிக்கடி இருப்புப் பாதையில் செல்வதை தடுக்கவும் பயன்படுகிறது.
மழை நீர் தேங்குவதை தடுக்கும்
இந்த கற்களால் மழை நீர் தேங்குவதை முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், தண்டவாளத்தின் அடியிலோ, அல்லது அதை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அது சரியான வடிகாலாக செயல்படுகிறது. அதிக எடை கொண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் செல்லும் போது அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த அதிர்வு சப்தம் அருகே உள்ள கட்டடங்கள், கட்டமைப்புகளை பாதிக்கும். இத்தகைய கூர்மையான கருங்கற்கள் இறுக்கமாகப் பிடித்து கொண்டிருப்பதால் அதிர்வுகளை ஏற்படுத்தாமல் இருக்கின்றன.
ஜல்லிக்கற்கள் ஏன்?
இந்த ஜல்லிக்கற்களின் முக்கிய பணியே ரயில் தண்டவாளங்களை பாதுகாப்பதுதான். தொடர்ந்து பல ரயில்கள் தண்டவாளத்தில் ஓடினாலும் அதன் அதிர்வை தாங்கிக் கொண்டு தண்டவாளம் விலகாமல் பார்த்துக் கொள்ளும். அத்துடன் தண்டவாளத்தில் செடிகள் வளர்வதையும் இந்த கற்கள் தடுக்கிறது.
ரயிலில் மட்டுமில்லை ரயில் பாதையிலும் ஸ்லீப்பர்
தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள் மட்டுமல்லாமலஸ் நீண்ட தகடுகளும் ரயில் பாதையில் வைக்கப்பட்டு அதில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஸ்லீப்பர்கள் என அழைக்கப்படுகின்றன. ஜல்லிக் கற்கள் இந்த ஸ்லீப்பர்களுக்கு நிலைத் தன்மையை அளிக்கும். ரயில் செல்லும் போது கான்கிரீட் தகடுகளும் ஜல்லிக்கற்களும் அதன் எடையை தாங்கிக் கொண்டு விபத்து ஏற்படாமல் தடுக்கும்.
கூர்மையான கற்கள்
ரயில் தண்டவாளங்களில் கூழாங்கற்கள் போல் இருக்கும் நைஸான கற்களையெல்லாம் பயன்படுத்த முடியாது. அதில் பயன்படுத்தக் கூடிய கற்கள் கரடுமுரடாக இருப்பது அவசியம். கூர்மையான முனைகளுடனும் இருக்க வேண்டும். கற்களை கொட்டிவிட்டால் மட்டுமே போதாது, இந்த கற்களை அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.

தண்ணீரால் சுத்தப்படுத்துவார்களா?
அதாவது ரயில் ஜல்லிக் கற்களை தண்ணீர் போட்டு சுத்தப்படுவது கிடையாது. அதில் இருக்கும் மண், தூசிகளை இயந்திரத்தின் மூலம் சலித்து நல்ல கற்களை பயன்படுத்துவதே பராமரிப்பு முறையாகும். ஜல்லிக்கற்களில் தேங்கும் சிறிய கற்கள், நிலக்கரி துகள்கள், இலைகள் போன்றவற்றால் அடைப்பு ஏற்படும். இதனால் கற்களில் மழை நீர் வடியும் திறன் குறைந்து அதன் உறுதித் தன்மை பாதிக்கப்படும். இதனால் Ballast Cleaning Machine கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள்.
சல்லடையில் சலிக்கப்படும் தூசுகள்
அந்த பிசிஎம் இயந்திரம் தண்டவாளத்தின் அடியில் உள்ள ஜல்லிக்கற்களை தோண்டி எடுக்கும். அவ்வாறு எடுக்கப்படும் கற்கள் இயந்திரத்தில் உள்ள சல்லடை அமைப்புக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை சலிக்கப்படும். பின்னர் தூசி, இலைகள், சிறிய கற்கள் தனியாக பிரிக்கப்பட்டு அவை அகற்றப்படும். சுத்தமான கற்கள் மீண்டும் தண்டவாளத்தில் போடப்படும். ஒரு வேளை கற்கள் மிகவும் பழையதாகிவிட்டால் மட்டுமே அதை மாற்றிவிட்டு புதிய கற்களை கொட்டுவார்கள்.
தூசிகள் என்னவாகும்?
தூசி கழிவுகள் கன்வேயர் பெல்ட் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஓரமாக கொட்டி வைக்கப்படும். பின்னர் தண்டவாளத்தின் உயரம் உள்ளிட்ட காரணிகள் சரிபார்க்கப்பட்டு, பிறகு அந்த ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும்.




Click it and Unblock the Notifications
