பக்கத்தில் இருந்தபோதும்.. பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா! ஈரானுடன் கைகோர்த்து புது முயற்சி!
டெல்லி: டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் மன்றத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். ஆனால், பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையே வரவேற்பை வலுப்படுத்த Civilisational Dialogue Forum அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன், இந்தியா பங்கேற்றிருந்தது.

நவ.20-22 வரை மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து இந்த மாநாட்டை நடந்தியிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடக்கி வைத்திருந்தார். மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ஈரான் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் தலைவர் முகமது மஹ்தி இமானிபூர் ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பல புதிய திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆனால், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். ஆனால், இந்தியா தரப்பில் பாகிஸ்தானுடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் விருந்தில் சாதாரணமாக இரு நாட்டு அதிகாரிகளும், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.
இந்தியாவை பொறுத்தவரை பகல்ஹாம் தாக்குதல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று நாம் உறுதியாக சொல்லிவிட்டோம். அதனால்தான் பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக், டெல்லி மாநாட்டில் பங்கேற்றிருந்த போதும்.. நாம் அவர்களுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. ஈரானுடன் மட்டும் பேசிவிட்டு.. பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருப்பது அந்நாட்டுக்கு பின்னடைவுதான்.
இந்த மாநாட்டை இந்தியா நடத்தினாலும்.. இது சர்வதேச மாநாடுதான். எனவே இதில் காஷ்மீர் மற்றும் சிந்து நதிநீர் உள்ளிட்ட விஷயங்களை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. ஆனால் அப்படி எதையும் செய்ய முடியவில்லை. மட்டுமல்லாது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவுக்கு செல்ல பாகிஸ்தான் அமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு நிராகரித்திருந்தது.
மொத்தத்தில் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு.. ஈரானுடன் காட்டும் நெருக்கம் பாகிஸ்தானுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
