திருப்பரங்குன்றத்தில் தீபம்! சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வராது? என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
சென்னை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவா அமைப்புகள் கோரும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையும், சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வும் உத்தரவிட்டிருந்தன. இருப்பினும் இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவை நீதிமன்றம் கொடுத்திருந்தது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும்.. அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதிப்பதாகவும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கிறது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய கல்தூண், பாரம்பரிய வழிப்பாட்டு தலமா? என்று எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோல கல்தூண் விஷயத்தில் எந்த ஒரு உரிமையும் நிலைநாட்டப்படவில்லை. மட்டுமல்லாது ஏற்கெனவே இருக்கும் நிலையை மாற்றும் வகையில் கட்டாய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
இதெல்லாம் ஓகேதான். ஆனால், சீராய்வு மனுக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தமிழக அரசின் மனுவை பொறுத்தவரை.. இந்த வழக்கில் உத்தரவு கொடுத்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் இன்று நீதிமன்ற அமர்வில் இருக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே அவசர வழக்காக சீராய்வு மனுவை எந்த தரப்பு விசாரிக்க கோரினாலும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
மட்டுமல்லாது நாளை (நவ.24) கார்த்திகை தீப திருநாளில், குருநானக் விடுமுறை என்பதால் நீதிமன்றம் செயல்படாது. எனவே புதன் கிழமைதான் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடைசி வரை இந்துத்துவா அமைப்புகள் கோரிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. ஆனால், வழக்கமாக நூற்றாண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
