நாகர்கோவில் ரயிலில்.. துடிக்க துடிக்க கொல்லப்பட்ட பெண்! யார் அந்தப் பெண்? உடைத்த ஒற்றை மோதிரம்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயிலில் கொல்லப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? நாகர்கோவிலுக்கு எப்படி வந்தார்? என்ற கேள்வி போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான 31 வயது அய்யப்பன் கைது செய்யப்பட்டாலும், கொல்லப்பட்ட அந்தப் பெண் யார்? என்ற கேள்வி போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது.

crime Nagercoil

சடலம் 4 நாட்களுக்கு மேலாகப் பெட்டிக்குள் கிடந்து முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிப்போயிருந்த நிலையில், அப்பெண்ணின் விரலில் கிடந்த ஒற்றைத் தங்க மோதிரத்தை வைத்து, குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் என 4 மாநிலங்களைத் தாண்டிச் சென்று போலீசார் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத சடலம்

கடந்த நவம்பர் 18-ம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையத்தின் 13-வது யார்டில் நின்றிருந்த ரயிலைச் சுத்தம் செய்த ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் இருக்கைக்கு அடியில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, விலா எலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் முறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.

சிசிடிவி காட்சிகள் மூலம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரைச் சேர்ந்த அய்யப்பன் (31) என்பவரைப் போலீசார் நவம்பர் 20-ம் தேதி கைது செய்தனர். ஆனால், கைதான அய்யப்பனுக்கும் கொல்லப்பட்ட பெண் யார் என்பது தெரியவில்லை. அப்பெண்ணின் உடைமைகளிலோ, ரயில் பெட்டியிலோ ஆதார் அட்டை, செல்போன் அல்லது ரயில் டிக்கெட் என எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை.

தமிழக மற்றும் கேரள காவல் நிலையங்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்துத் தேடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

குஜராத் முதல் மத்தியப் பிரதேசம் வரை

அப்பெண்ணின் உடலை ஆய்வு செய்த தனிப்படை போலீசாரின் கண்களில், அவரது விரலில் அணிந்திருந்த பாம்பு வடிவத்திலான தங்க மோதிரம் சிக்கியது. வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அந்த மோதிரத்தை வைத்தே விசாரணையைத் தொடங்க போலீசார் முடிவு செய்தனர்.

அந்தத் தங்க மோதிரத்தின் உட்புறத்தில் பொறிக்கப்பட்டிருந்த பி.ஐ.எஸ் ஹால்மார்க் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த எண்ணை வைத்துத் தேடியபோது, அந்த மோதிரம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு மொத்த நகை வியாபாரியால் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

உடனடியாக குஜராத் வியாபாரியைத் தொடர்பு கொண்ட நாகர்கோவில் ரயில்வே போலீசார், அந்த மோதிரம் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரத்தைச் சேகரித்தனர். அதில், அந்த மோதிரம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள நகைக்கடை வழியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சில்லறை நகைக்கடைக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அந்த நகைக்கடையைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த மோதிரத்தை வாங்கியதற்கான அசல் ரசீது மற்றும் வாங்கியவரின் பான் கார்டு விவரங்களைக் கடைக்காரர் போலீசாரிடம் வழங்கினார்.

யார் அந்த ஊர்மிளா மார்க்கம்? 3 மாத சோகக் கதை

பான் கார்டு முகவரியை வைத்துத் தேடியதில், கொல்லப்பட்ட பெண் மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்மிளா மார்க்கம் (வயது 52) என்பது உறுதியானது.

தொடர்ந்து மத்தியப் பிரதேச போலீசாரின் உதவியுடன் ஊர்மிளாவின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, நெஞ்சை உலுக்கும் பின்னணி வெளிவந்தது. ஊர்மிளா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரிலிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 22-ம் தேதி பாலாகாட் மாவட்டத்தில் உள்ள மலாஜ்கண்ட் காவல் நிலையத்தில் கடத்தல் மற்றும் மாயமானதாகப் புகார் அளித்து வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

சொந்த ஊரை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்து வந்தது ஏன்?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து, சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழகத்தின் கடைக்கோடியான நாகர்கோவிலுக்கு ஊர்மிளா எப்படி வந்தார் என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கடந்த 3 மாதங்களாக அவர் எந்தெந்த ஊர்களுக்குச் சென்றார்? மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது யாரேனும் அவரை அழைத்து வந்தார்களா? திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வந்த ரயிலில் அவர் எப்படி ஏறினார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது தனது மகளின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள ஊர்மிளாவின் தந்தை, கணவர் மற்றும் பிள்ளைகள் சடலத்தை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்வதற்காக மத்தியப் பிரதேசத்திலிருந்து கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர். ஒரு சாதாரணத் தங்க மோதிரத்தின் ஹால்மார்க் முத்திரை, 4 மாநிலங்களைக் கடந்து அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பெண்ணின் அடையாளத்தை மீட்டுக் கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+