அந்த ஒரு வளைவில் வேன் கட்டுப்பாட்டை இழந்தது எப்படி? திருச்சி துறையூர் கோர விபத்து நடந்தது எப்படி?
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஆம்னி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்ப மரத்தில் மோதிய கோர விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுப நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோது நடந்த இந்தச் சம்பவம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகாராஜபுரம் மற்றும் சாத்தனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம், முருகன், சக்திவேல், சுப்ரமணி, சங்கிலி, ராமலிங்கம், ராமர் மற்றும் வேன் ஓட்டுநர் ராஜேஷ். இவர்களுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாவாடை மற்றும் சீதாராமன் ஆகியோரும் இணைந்து, திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வசிக்கும் இவர்களது சக ஊழியர் ஒருவரின் வீட்டில் நேற்று காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் 10 பேரும் ஒரு ஆம்னி வேனில் நாமக்கல் சென்றிருந்தனர். விழா முடிந்ததும், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அனைவரும் அதே வேனில் துறையூர் - முசிறி சாலை வழியாகத் தங்களது சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருச்சி விபத்து நடந்தது எப்படி?
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோத்தூர்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த ஒரு திருப்பத்தில் வேன் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையை விட்டு விலகிய வேன், ஓரத்தில் நின்றிருந்த பெரிய வேப்ப மரத்தின் மீது நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது.
வேன் மோதிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். வேனின் முன்பகுதி முழுமையாக நொறுங்கியிருந்ததால், உள்ளே இருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் வேன் ஓட்டுநர் ராஜேஷ், மாணிக்கம், முருகன், சங்கிலி மற்றும் பாவாடை ஆகிய 5 பேரும் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜம்புநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல், சுப்ரமணி மற்றும் சீதாராமன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
மேலும் படுகாயமடைந்த ராமலிங்கம் மற்றும் ராமர் ஆகிய இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 8 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், வேனை அதிவேகமாக இயக்கியதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, திருச்சி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
