கேரளா ஸ்நேகா ஜாய்க்கு லாட்டரியில் அடித்த 32 கோடி! ஓவர் நைட்டில் தலைகீழாக மாறிய வாழ்க்கை
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஸ்நேகா ஜாய் என்ற பெண்ணுக்கு லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு விழுந்துள்ளது. 3 கோடி பரிசு விழுந்தாலே கையும் ஓடாது, காலும் ஓடாது என சொல்வார்கள், 32 கோடி என்றால் சும்மாவா? பரிசு வாங்கியதில் இருந்து எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் ஸ்நேகா ஜாய். 32 கோடி ரூபாய் பரிசு விழுந்து பற்றி கூறிய அந்த பெண், உலகம் முழுக்க ஒரு ரவுண்ட் சுற்றி வர திட்டமிட்டுள்ளாதாக கூறியுள்ளார்.
இந்த பெண்ணின் தந்தை கேரளாவின் எர்ணாகுளத்தில் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். அவர் கூறுகையில், 'மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். எங்களின் பிரார்த்தனைகளுக்கு கிடைத்த வெகுமதியாக இந்த லாட்டரி பரிசை கருதுகிறோம்' என்றார்.

ரூ.32 கோடி லாட்டரியில் பரிசு
கேரளாவை சேர்ந்தவர் ஸ்நேகா ஜாய். கனடாவில் பணியாற்றி வரும் ஸ்நேகா ஜாய்க்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கேரள மாநிலத்தில் லாட்டரிகள் விற்கப்படுவதால், லாட்டரிகள் அவருக்கு புதிதாக எதுவும் தெரியவில்லை. இதனால், கனடாவிலும் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்ப்போமே என்று அங்கு லாட்டரி வாங்கியுள்ளார் ஸ்நேகா ஜாய்.
எட்மோண்டன் நகரில் வசித்து வரும் ஸ்நேகா ஜாய், கடந்த மாதம் 21 ஆம் தேதி கனடாவில் லாட்டரி வாங்கியுள்ளார். நமக்கு எங்கே அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்தவருக்கு நினைத்து பார்க்க முடியாத ஒரு யோகம் அந்த லாட்டரியில் அடித்துள்ளது. அதாவது, லாட்டரி எண்ணை சரியாக கணித்த ஸ்நேகா ஜாய்க்கு 5 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.32 கோடியாகும்.
உலகம் முழுக்க சுற்றப் போகிறேன்
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு கனடாவில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் வைத்து ஸ்நேகா ஜாய்க்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 3 கோடி பரிசு விழுந்தாலே கையும் ஓடாது, காலும் ஓடாது என்பார்கள்.. 32 கோடி என்றால் சும்மாவா? பரிசு வாங்கியதில் இருந்து எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்நேகா ஜாய், இது குறித்து கூறுகையில், உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
எனது மகிழ்ச்சியை மூன்றே வார்த்தைகளில் சொல்வது என்றால், அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி என்று சொல்லலாம்" என்றார். 32 கோடி பரிசுத்தொகையை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்ட போது, எனக்கு இருக்கும் வீட்டுக்கடனை முதலில் அடைத்துவிட்டு ஃபைனான்சியல் ரீதியாக கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவேன். அதன்பிறகு உலகம் முழுக்க ஒரு ரவுண்ட் சுற்றி வரலாம் என்று திட்டமிட்டுள்ளேன். பரிசுத்தொகையை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
காங்கிரஸ் நிர்வாகி
ஸ்நேகா ஜாய்க்கு கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கூர் சொந்த ஊராகும். அவரது தந்தை வெங்கூரில் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். ஒரே மகளான ஸ்நேகா ஜாய், 5 ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவருடன் கனடாவுக்கு குடி பெயர்ந்துள்ளார். ஸ்நேகா ஜாயின் கணவர் விஜில் வர்க்கீஸ். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் அவரது சொந்த ஊர் ஆகும். ஸ்நேகா ஜாய், கனடாவுக்கு செல்லும் முன்பாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
கடல் கடந்து சென்றும் லாட்டரியில் பரிசு
கடந்த 2020 ஆம் ஆண்டு வெங்கூர் கிராம பஞ்சயாத்து தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்டுள்ளார். ஸ்நேகா ஜாய்க்கு லாட்டரியில் பரிசு விழுந்ததால், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் உள்ள அவரது தந்தை கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். எங்களின் பிரார்த்தனைகளுக்கு கிடைத்த வெகுமதியாக இந்த லாட்டரி பரிசை கருதுகிறோம்' என்றார்.
கேரளாவை பொறுத்தவரை அங்கு லாட்டரிகள் விற்கப்படுவதால், உள்ளூர் லாட்டரிகளில் பரிசு வெல்பவர்கள் பற்றிய செய்திகள் அங்குள்ள மக்களிடையே பரபரப்பாக பேசப்படும். ஆனால் தற்போது கடல் கடந்து போயும் லாட்டரிகளில் பரிசு அடித்துவிட்டாரே என்று கேரள சேட்டன்கள் இடையே சுவாரசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.





Click it and Unblock the Notifications
