கூட்டணி கட்சி தலைவர்களுக்கு.. போனை போட்ட விஜய்.. இன்று அவசர ஆலோசனை.. நம்பிக்கையில்லா தீர்மானம்?
சென்னை: முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 2 மணியளவில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்த அச்சமும், அடுத்தடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வாய்ப்புகள் உள்ளன.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் வெளியிலிருந்து ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்த இடதுசாரி எம்.எல்.ஏ.க்களும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியூகம்
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள மிக முக்கியமான விவகாரங்களில் ஒன்று, தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து கொளத்தூர் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூரையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் ஆளுங்கட்சி கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதா அல்லது தவெகவே நேரடியாகக் களம் இறங்குவதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உட்கட்சி அழுத்தம் மற்றும் கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தி
மறுபுறம், தவெக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள சூழலில், அரசுக்கு உள்ளேயும் கூட்டணிக்கு உள்ளேயும் பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ளன. தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம், அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி கட்சித்தலைவர்களின் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, உடனடியாகத் தீர்வு காண்பதன் மூலம் கூட்டணிக்குள் எழும் சலசலப்புகளைச் சரிசெய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
நம்பிக்கை இல்லாத் தீர்மான அச்சம்: ஆட்சியைக் காக்கும் முயற்சி
இவை அனைத்திற்கும் மேலாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளநம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்த அச்சமே இந்த அவசர சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆறு மாத கால இடைவெளி முடிந்துவிட்டதால், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து விஜய் உறுதிமொழி பெற்றிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் நேரில் அழைத்துப் பேசுவதன் மூலம், எந்தவொரு அரசியல் நெருக்கடியும் வந்தாலும் கூட்டணி பலம் சிதறாமல் அப்படியே தவெக அரசுக்கு ஆதரவாக நிற்பதை உறுதி செய்ய முதல்வர் விஜய் தீவிர காய் நகர்த்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications
