Pills: மாத்திரைகளின் நடுவே கோடு ஏன் தெரியுமா? இந்த விஷயம் தெரியாமல் உடைக்காதீங்க
சென்னை: மெடிக்கல்களில் வாங்கும் மாத்திரைகளின் நடுவில் மெல்லிய கோடு ஒன்று இருப்பதை பார்த்து இருப்போம். பலரும் இந்த மெல்லிய கோடு, மாத்திரை நிறுவனங்களின் டிசைனாக இருக்கலாம் என்று கூட நினைத்து இருப்பார்கள்.
தங்கள் நிறுவனத்தின் மாத்திரை என்பதற்காக, மாத்திரையை தயாரிக்கக்கூடிய மருந்து நிறுவனங்கள், இப்படி கோடுகளை வைத்து வேறுபடுத்தி காட்டியிருக்கலாம் என்று கூட பலருக்கும் தோன்றியிருக்கும். ஆனால் உண்மையில் இந்த கோடுகள் வெறும் டிசைன்களுக்காக போடப்படுவது இல்லை. இதற்கு பின்னால் தவிர்க்க முடியாத ஒரு காரனம் உள்ளது. அதுபற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

மாத்திரைகள் நடுவே கோடு எதற்கு?
மத்திரைகளில் சரியாக நடுவில் இத்தகைய கோடுகள் காணப்படும். இந்த கோடுகள் ஸ்கோரிங் லைன் என்று அழைக்கப்படுகிறது. மாத்திரையில் பாதி டோஸ்தான் தேவைப்படுகிறது என்றால் அதை சம அளவாக உடைக்க ஏதுவாக இந்த கோடுகள் மாத்திரையில் கொடுக்கப்படுகின்றன. ஏனெனில் சில நேரங்களில், பாதி மாத்திரையை மட்டும் உட்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது உண்டு.
அப்போது மாத்திரையை சேதாரம் இன்றி துல்லியமாக பாதி அளவு உடைக்க ஏதுவாக இந்த கோடுகள் உதவுகின்றன. இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுவதாவது:- சில மருந்துகள் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு 80 கிலோ எடை கொண்ட ஒரு நபருக்கு1,000 எம்.ஜி மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது என்றால் 40 கிலோ எடை கொண்டவருக்கு அதில் பாதி அளவு அதாவது 500 எம்.ஜி மாத்திரையே பரிந்துரைக்கப்படும்.
கோடு இல்லாத மாத்திரைகளை உடைக்க கூடாது
அந்த மாத்திரையில் 500 எம்ஜி உற்பத்தி இல்லாத பட்சத்திலோ, சந்தையில் கிடைக்காத பட்சத்திலோ மருத்துவர்கள், பாதி மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள் என்று நோயாளிகளை அறிவுறுத்துவார்கள். அப்போது இந்த மாத்திரையை எளிதாக உடைக்க முடியும். சில மாத்திரைகளில் இப்படியான கோடுகள் எதுவும் இருக்காது. இந்த மாத்திரைகளை உடைக்கக் கூடாது.
இதே போன்று மேலும், சில மாத்திரைகளில்கூட இந்தக் கோடு இருப்பதில்லை. இதன் பொருள், இந்த மாத்திரைகளை உடைக்கக் கூடாது, ஏனெனில் அவை குறைந்த செயல்திறன் கொண்டவையாக இருக்கலாம். அவற்றை முழு மாத்திரையாக உட்கொள்ளும் போதுதான் அதன் செயல்திறன் முழுமையாக நோயாளிகளுக்கு கிடைக்கும்.
எஸ்ஆர் என எழுதப்பட்ட மாத்திரைகள் எதற்கு
மருந்தின் வகை, அளவு மற்றும் அதில் உள்ள கலவைகளை பொறுத்து இது மாறுபடும் சில மாத்திரைகளில் மிகக் குறைந்த அளவே மருந்து இருக்கும் என்பதால், அவற்றை முழுமையாகவே உட்கொள்ள வேண்டும். சில மாத்திரைகளில் மருந்தை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ள, அவற்றில் பிரத்யேக கோட்டிங்ஸ்கள் இருக்கும். எனவே இத்தகைய மாத்திரைகளை பிரித்துச் சாப்பிடுவது மருந்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். எனவே, தேவைப்படும் மாத்திரைகளில் மட்டுமே பிரிப்பதற்கான கோடுகள் இடம் பெற்று இருக்கின்றன. டிசைன்களுக்காக அவை போடப்படுவது இல்லை.
அதுபோக சில மாத்திரைகளில் எஸ்.ஆர் என்று எழுதப்பட்டு இருக்கும். அதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்லோ ரிலீஸ் என்பதாகும். இந்த மாத்திரைகளில் பிரத்யேக கோட்டிங்ஸ்கள் இருக்கும். அதாவது, நமது உடல் மெதுவாக அதை உறிஞ்சுக்கொள்ளும் வகையில், இந்த கோட்டிங்ஸ்கள் உதவும். 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் மெதுவாக இந்த மருந்துகள் வேலை செய்யும்.
இந்த மாத்திரைகளை உடைத்துவிடாதீங்க
இந்த மாத்திரையை உடைத்தால், மாத்திரையில் உள்ள கோட்டிங்ஸ்களும் போய்விடும். ஒருநாள் முழுவதும் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாத்திரைகளை சில நிமிடங்களில் மருந்துகள் வேலை செய்ய தொடங்கி விடும். இது உடனடியாக உடலுக்குள் சில பாதிப்புகளை ஏற்ப்டுத்திவிடக்கூடும்.
எனவே எந்த ஒரு மாத்திரையை உடைக்கும் முன்பாக 2 விஷயங்களை பரிசோதிப்பது அவசியம். மாத்திரையில் கோடு உள்ளதா? மருந்து அட்டையில் எஸ்.ஆர், இஆர், எக்ஸ் ஆர், இசி என்பது போன்ற குறியீடுகள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். கோடுகள் இல்லை என்றாலோ. இந்த குறியீடுகள் இருந்தாலோ.. அந்த மாத்திரையை மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் உடைத்து சாப்பிட வேண்டாம்.. இந்த விவரங்கள் பொதுவான விவரங்கள் என்பதால், மருந்துகளை உட்கொள்ளும் முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.






Click it and Unblock the Notifications
