டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்க காரணம் என்ன? பின்னால் இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா?
சென்னை: வாகனங்களில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். அதாவது டயர்கள் எப்போதுமே கருப்பு வண்ணத்தில் மட்டுமே இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், வெள்ளை என வித விதமான கலர்களில் பஸ், லாரி, கார், பைக் என எத்தனை வாகனங்கள் தென்பட்டாலும் அதன் டயர்கள் மட்டும் ஒரே மாதிரியாக கருப்பு நிறத்தில்தான் இருக்கும்.
அது ஏன் கருப்பு நிறம் மட்டும். வெள்ளை நிறத்திலோ.. பச்சை, மஞ்சள் நிறத்திலோ வெளியிட்டால் இன்னும் பார்ப்பதற்கு டிசைன் அருமையாக இருக்குமே? ஏன் வண்ண வண்ண கலர்களில் இருப்பது இல்லை என உங்களுக்கு தோன்றலாம். கருப்பு நிறத்தில் மட்டுமே வாகனங்களின் டயர்கள் இருப்பது எதேச்சையானது அல்ல. அதற்கு பின்னால் ஒரு சயின்ஸ் உள்ளது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

கருப்பு நிறத்தில் மட்டும் தயாரிப்பது ஏன்?
இயற்கையான ரப்பர் பால் வெண்மையானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ரப்பர் மரங்களை பார்க்கும் போது கூட வெண்மையான பால் போல ரப்பர் வடிவதை பார்த்து இருக்கக் கூடும். துவக்க காலத்தில் வாகனங்களுக்கு டயர்கள் தயாரிக்கப்படும் போது வெண்மை நிறத்தில் தயாரிக்கப்பட்டன. ஆனால், வெள்ளை நிறத்தில் டயர்கள் தயாரிக்கப்படும் போது அவை நீண்ட காலம் உழைக்கவில்லை.
திடமானதாகவும் நீடித்தும் உழைக்கும் தன்மையுடன் அது இல்லை. சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது உராய்வின் காரணமாக ஏற்படும் வெப்பத்தை ஏற்கும் அளவுக்கும் அது இல்லை. இதனால், கார்பன் பிளாக் என்ற வேதியியல் சேர்மத்தை ரப்பருடன் கலந்து டயர்கள் தயாரித்தனர். இந்த கலவை ஆய்வாளர்களுக்கு எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுத்தது.
நீண்ட காலம் பயன்படுத்த முடியும்
கருப்பு பவுடர் சேர்த்த பிறகு டயர்கள் நீண்ட காலம் உழைக்க தொடங்கின. சாலைகளுக்கும் டயர்களுக்கும் நல்ல கிரிப் கிடைத்தன. வெப்பத்தை தடுக்கும் ஆற்றல், சூரிய ஒளி, மற்றும் அன்றாடத் தேய்மானத்திலிருந்து டயரைப் பாதுகாத்தது. இதன் மூலம் டயர்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடிந்தது. வெள்ளை நிற டயர்கள் 100 முதல் 200 நாட்கள் வரையே பயன்படுத்த முடிந்த நிலையில், வேதி சேர்மம் சேர்த்த பிறகு அதன் ஆயுட்காலம் நீடித்தது.
கார்பன் பிளாக் எப்படி தயாரிக்கப்படுகிறது?
ஹைட்ரோ கார்பன் பொருட்களை எரிப்பதன் மூலமாகவோ அல்லது வெப்பசிதைவு செய்வதன் வாயிலாகவோ கார்பன் பிளாக் தயாரிக்கப்படும். இந்த செயல்முறையின் போது நுண்ணிய துகள்கள் உருவாகும். ரப்பருடன் கார்பன் பிளாக் கலக்கப்படும்போது, சிறந்த வலூவூட்டும் பொருளாகச் அது செயல்படுகிறது. இதனால் ரப்பரின் இழுவிசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் தேய்மானத்தைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது.
இயற்கையான ரப்பர் மிகவும் மென்மையானது. இதனால் அதிக பாரம் ஏற்றினால் எளிதில் உருக்குலையும். கார்பன் பிளாக்கை சேர்ப்பதால் டயர்கள் வலுவானதாக மாறுகிறது. இதனால், பாரம் ஏற்றி செல்லும் போதோ, வளைவில் திரும்பும் போதே அது எடையை தாங்கி வலுவாக நிற்கிறது. கருப்பு வண்ணம் சேர்க்கப்படுவதன் வாயிலாக டயர்கள் விரைவில் சேதம் அடைவதும் தவிர்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் உலகில் 99 சதவீத வாகனங்களுக்கு டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.



Click it and Unblock the Notifications
