ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்! மாரடைப்பால் உயிர் பிரிந்தது!
சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த 72 நாட்களாக சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 75. அவரது உயிர் இன்று மதியம் 2.24 மணிக்கு பிரிந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை உறுப்பினர் வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நுரையீரல் பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு துறைகளின் மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. எனினும் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார். இந்த கடினமான சூழலில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினை விட 8,795 வாக்குகள் அதிகம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்தவர் வி.எஸ்.பாபு. இவர் அந்த தொகுதியில் பெற்ற வாக்குகள் 82,997 ஆகும். அதாவது ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஸ்டாலினை தோற்கடித்துவிட்டு வெற்றிச் சான்றிதழ் வாங்க வரும் போது ஃபினிஷ்டு சைகையை காட்டி புகழ் பெற்றவர்.
சட்டசபையில் 108 ஆக குறைந்த தவெக பலம்
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் வென்றிருந்தார். சட்டப்படி ஒரு தொகுதியில் மட்டுமே செயல்பட முடியும் என்பதால் பெரம்பூரை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். இதனால் தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்தது, தற்போது நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் வென்றதால் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் வி.எஸ்.பாபுவின் மறைவால் தவெக எம்எல்ஏக்களின் பலம் 108 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நல பாதிப்பால் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

72 நாள் சிகிச்சை
அன்று முதல் சுமார் 72 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 58 நாட்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாபுவின் உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியானது.
அடுத்த நாள், கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வி.எஸ்.பாபுவை மருத்துவமனைக்கே சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை.
போலீஸ் குவிப்பு
இதனிடையே வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் என்ற தகவல்கள் கிடைத்தன. ஆனால் இதை மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் மறுத்திருந்தார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று திடீரென போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் விரைந்திருந்தார்.
வி.எஸ்.பாபு மறைந்தார்
இதனால் வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க 2ஆவது முறையாக முதல்வர் விஜய் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த பரபரப்புகள் ஏற்பட்ட சிறிது நேரத்தில் வி.எஸ்.பாபு காலமாகிவிட்டதாக மருத்துவமனை அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் இரங்கல்
வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் அந்த இரங்கல் செய்தியில்,"கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் இரங்கலில் தெரிவித்துள்ளார்



Click it and Unblock the Notifications
