40 வயது திருப்பூர் கீதாவுக்கு 3 கணவன்கள்.. 1 ஆண் நண்பர்.. கடைசியில் வாய்க்காலில் முடிந்த வாழ்க்கை
திருப்பூர்: கீதாவுக்கு 3 திருமணம் நடந்து விட்டது.. இதை தவிர, ஆண் நண்பர் ஒருவரும் இருக்கிறார்.. இவர்களுக்குள் நடந்த தகராறில் கள்ளக்காதலனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார் 40 வயது கீதா.. பிறகு கீதாவே அவரை ஜாமீனிலும் வெளியே எடுத்துள்ளார். அப்படியிருந்தும், இந்த கொலை நடந்து விட்டது.. இந்த சம்பவம்தான் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது திருப்பூர் மாவட்டத்தில்? யார் இந்த பெண் கீதா?
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. மொத்தம் 3 கணவர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், அதே கோவையைச் சேர்ந்த மெக்கானிக் கதிரவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கீதாவின் வாழ்க்கையில் 4-வது நபராக வந்த கதிரவனுடன் நாளடைவில் நெருக்கம் அதிகரித்துள்ளது. 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பூர் கீதா
கதிரவனுக்கு கீதா அடிக்கடி தங்க நகைகளைக் கொடுத்து உதவி வந்துள்ளார். ஆனால், வாங்கிய நகைகளை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் 2 பேருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்தச் சண்டை அடிதடி வரை சென்றுள்ளது.
இதுதொடர்பாக கீதா ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கதிரவனைக் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். பிறகு கீதாவே அவரை ஜாமினில் வெளியே எடுத்துள்ளார். ஆனாலும், இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை.
தங்க நகைகளை தந்த பெண்
கீதா தான் கொடுத்த நகைகளையும் பணத்தையும் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் கதிரவனுக்கும் அவர் மீது கோபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கீதாவைக் கொலை செய்ய கதிரவன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது நண்பரான சூலூரைச் சேர்ந்த சண்முக வடிவேலுடன் சேர்ந்து திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே கிருபாகரன் தென்னந்தோப்பு உள்ளது. அதன் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. அந்தப் பகுதியில் கீதாவைத் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது என்று இருவரும் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நகைகளைத் திருப்பித் தருவதாக சொல்லி, கீதாவை கதிரவன் அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீதாவை வாய்க்காலில் தள்ளி விட்டார்.. இதில் துடிதுடித்து கீதா அதிலேயே இறந்து விட்டார்.
வாய்க்காலில் மிதந்த உடல்
பிறகு கீதா தவறி வாய்க்காலில் விழுந்துவிட்டதாகக் கூறி கதிரவன் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள், வாய்க்காலில் பெண்ணின் உடல் கிடப்பதை அந்த பகுதி மக்களும் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.. அங்கு வந்தவர்கள் கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கீதாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பிறகுதான், இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கதிரவனைப் பிடித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. கதிரவனின் நண்பர் சண்முக வடிவேலுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா, 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தைச் செய்தார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
