விஎஸ் பாபு எப்படி உயிரிழந்தார்? மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு காலமானார். கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபுவுக்கு தொடர்ந்து 72 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அமைந்தரகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஎஸ் பாபு தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்ஜும் இதனையே தெரிவித்து இருந்தார். விஎஸ் பாபு உடல் நிலை பற்றி துவக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக எந்த அறிக்கையும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பிற்பகலில் விஎஸ் பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பாக குவிக்கப்பட்டனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மருத்துவமனை வருகை தந்தார். மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காட்சி அளித்த நிலையில் விஎஸ் பாபு காலமானதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
செப்டம்பர் 9 ஆம் தேதி நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் விஎஸ் பாபு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் குழுவினர் பல்வேறு சிகிச்சைகளை அளித்தும் அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இன்று மதியம் 2.24 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார் என்று எம்.ஜி.எம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்த விஎஸ் பாபு முதன் முதலாக புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியிருந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் கடந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் தவெக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை தோற்கடித்து விஎஸ் பாபு எம்.எல்.ஏ ஆகியிருந்தார்.


Click it and Unblock the Notifications
