பிரம்மாண்டமா இருக்கே! ரூ.427 கோடியில் தயாரான குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்.. வெளியான புகைப்படம்!
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பேருந்துகளைப் படிப்படியாக நகரின் வெளிப்பகுதிகளுக்கு மாற்றும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், மேற்கு மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கத்திற்கு இணையாக குத்தம்பாக்கம் நிலையம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கட்டிடப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்தப் பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை (NH-48) ஒட்டி சுமார் 24.8 ஏக்கர் பரப்பளவில், ரூ.427 கோடி செலவில் இந்தப் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'அறிஞர் அண்ணா பேருந்து முனையம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகப் பயணிகள் காத்திருக்கும் பகுதி முழுவதும் ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. பயணிகளின் வசதிக்காக 41 கடைகள், உணவகங்கள், ஏடிஎம் மையங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனி கழிவறைகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, இலவச வைஃபை மற்றும் வெளியூர் பயணிகள் ஓய்வெடுக்கக் குறைந்த கட்டண தங்கும் அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 1,700-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 235 கார்களை நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்?
இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பகுதியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு மாற்றப்படும். குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா மற்றும் கேரளா செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.
பணிகள் முடிந்தும் திறப்பு விழா தள்ளிப்போவது ஏன்?
முதலில் 2025 இறுதியிலும், பின்னர் 2026 பிப்ரவரியிலும் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை திறப்பு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதற்குப் பின்னால் சில முக்கிய நடைமுறை சிக்கல்கள் உள்ளன:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளுக்கு டீசல் செலவு அதிகமாகும் என்பதோடு, பயண நேரமும் வீணாகும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலை குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் உள்ளே நுழைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தச் சாலையை அகலப்படுத்தும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது, நகருக்குள் செல்ல போதிய மாநகரப் பேருந்துகள் இல்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். அதே போன்ற நிலை குத்தம்பாக்கத்திலும் ஏற்படக் கூடாது என்பதற்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், பூந்தமல்லி வரை வரவுள்ள மெட்ரோ ரயில் பாதையைக் குத்தம்பாக்கம் வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்தின் பார்க்கிங், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் டெண்டர் பணிகளும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான நடைமுறைகளும் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகள், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எளிதாக வந்து செல்லும் ரவுண்டானா மற்றும் சாலைப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
