ஸ்டாலினுக்கு எதிரான வெற்றி, கந்து வட்டி புகார், 40 ஆண்டுகால அரசியல்.. யாரிந்த கொளத்தூர் வி.எஸ் பாபு?
சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
மருத்துவமனை சிகிச்சை
கடந்த 2026 செப்டம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் வி.எஸ். பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று மறைந்தார். அவரது நீண்டகால மருத்துவமனை சிகிச்சை காரணமாக, தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரி கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால வாழ்க்கை
சென்னை வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த வி. சுந்தரம்பிள்ளை பாபு என்கிற வி.எஸ். பாபு, 1951ம் ஆண்டு வி. சுந்தரம்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரப்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை பயின்ற இவர், இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அயனாவரம், ஐ.சி.எஃப் (ICF), புரசைவாக்கம் மற்றும் ஜமாலியா ஆகிய பகுதிகளில் தனது அரசியல் செய்ததால், உள்ளூர் வட்டாரங்களில் புரசை பாபு என்று அழைக்கப்பட்டார்.
திமுகவில் வளர்ச்சி
நீண்ட காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்த வி.எஸ். பாபு, வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்வில் வளர்ச்சியடைந்த அதே வேளையில், வி.எஸ். பாபு பல்வேறு சர்ச்சைகளிலும் சட்டச் சிக்கல்களிலும் சிக்கினார். குறிப்பாக, 2011ம் ஆண்டு ஆட்சி வந்த பிறகு, இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
2011-2012 காலகட்டத்தில், வி.எஸ். பாபு மீது அதிக வட்டி வசூலித்ததாக மற்றும் சொத்துக்களை அபகரித்ததாகப் பல புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
தொடர் புகார்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக, தி.மு.க. தலைமையால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இதன் மூலம் வடசென்னை அரசியலில் அவர் சற்று பின்னடைவைச் சந்தித்தார்.
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பிறகு சில ஆண்டுகள் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த வி.எஸ். பாபு, 2016-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் சில ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், அவருக்கு முக்கியப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, 2026 பிப்ரவரி 7-ம் தேதி விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். வடசென்னைப் பகுதியில் இவருக்கு இருந்த பழைய அறிமுகம் மற்றும் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு, கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலும் கொளத்தூர் வெற்றியும்
2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைவரும் அப்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த கொளத்தூர் தொகுதியில், த.வெ.க. வேட்பாளராக வி.எஸ். பாபு அறிவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் தொகுதியில், மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகளில் வி.எஸ். பாபு 82,997 வாக்குகளைப் பெற்று, மு.க. ஸ்டாலினை விட 8,795 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2026 மே மாதம் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற வி.எஸ். பாபு, பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் காலமாகியுள்ளார். இவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக விரைவில் அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.




Click it and Unblock the Notifications
