இந்தியாவில் இலவச ரயில்.. டிக்கெட்டே எடுக்க வேண்டாம்.. எந்த ரூட்டில் ஓடுது தெரியுமா?
சென்னை: இந்தியாவில் ஓடும் ரயில் ஒன்றில் பயணிகள் டிக்கெட் எடுக்கவே தேவையில்லை. முற்றிலும் இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது. ஏதோ கண்காட்சியில் இந்த ரயில் ஓடுகிறது என நினைக்க வேண்டாம். பொதுமக்களுக்காக இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிக்க பயணிகள் ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவையில்லை.
நம்ம ஊரில் ஓடக்கூடிய வெற்றிப்பயண பேருந்து திட்டம் போல ரயில்வேயும் எதுவும் சலுகை அறிவித்துவிட்டதா? என நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை.. குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் மட்டும் ஓடக்கூடிய ரயிலுக்கு கட்டணம் இல்லாமல் இயக்கப்படுகிறது. எந்த ரூட்டில் அப்படி ரயில் ஓடுகிறது? எதற்காக இந்த ரயில் டிக்கெட் கட்டணம் இன்றி இலவசமாக இயக்கப்படுகிறது? என்பதற்கான காரணத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.

டிக்கெட் கட்டணம் இன்றி ஓடும் இந்திய ரயில்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நங்கல் நகரில் இருந்து இமாசலப் பிரதேசத்தில் உள்ள பக்ரா வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 13 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலில் பயணிகள் முற்றிலும் இலவச பயணம் கிடைக்கிறது. 40 நிமிடங்கள் ஆகக்கூடிய இந்த பயண தூரத்த்தில் 6 ரயில் நிலையங்களும் உள்ளன.
இயற்கை அழகை ரசித்தபடியே செல்லலாம்
பயணிகள் இதில் எங்கு ஏறி இறங்கினாலும் டிக்கெட் எதுவும் செலுத்தாமல் இலவசமாகவே சென்று வரலாம். முற்றிலும் இயற்கை சூழ்ந்த இடமாக இந்த ரயில்வே தடம் உள்ளது. ஷிவாலிக் மலைப்பகுதி மற்றும் சட்லெஜ்ட் ஆற்றை ஓட்டி செல்லக்கூடிய இந்த ரயில் பயணம் பயணிகளின் கண்ணிற்கு விருந்தளிக்கக் கூடிய ரூட் ஆகும்.
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இயற்கை காட்சிகளும், ஆற்று நீரும் என பயணிகளை மெய்மறக்க வைக்கும் வகையில் இந்த ரூட் உள்ளது. வெறும் 13 கிலோ மீட்டர் என்றாலும் மூன்று சுரங்கங்கள் வழியாக இந்த ரயில் செல்கிறது. காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகள் மட்டுமே இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.
கட்டணமின்றி இயக்கப்பட காரணம், ரயிலின் வரலாறு
இந்த ரயில் சேவை 1948 ஆம் ஆண்டு கால கட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பக்ரா - நங்கல் அணை கட்டும் பணி தொடங்கிய போது, ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள், என்ஜினியர்கள் சென்று வரவும், கனரக இயந்திரங்கள், கட்டுமான பொருட்களை எடுத்து செல்லவும் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதாம்.
அணை கட்டும் தொழிலாளர்களுக்காவே தொடங்கப்பட்ட சேவை என்பதால் இதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை. காலையில் வேலைக்கு போகும் போதும் வேலை முடிந்து திரும்பும் போதும் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தினர். அணை கட்டும் பணிகள் முடிந்தாலும் இந்த ரயில் சேவையை நிறுத்த முடியாமல் போனது.
இந்தியன் ரயில்வே இயக்கவில்லை
ஏனெனில், அந்த வழித்தடத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்கு இந்த ரயில் சேவை இன்றியமையாததாக மாறிப்போனது. இதனால் தொடர்ச்சியாக இலவசமாகவே ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை இந்திய ரயில்வே இயக்கவில்லை. மாறாக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) கட்டுப்பாட்டில் இது இயங்குகிறது.
பயணிகள் செல்வதற்கான கட்டணம் மற்றும் இயக்க செலவுகள் என அனைத்திற்கும் உண்டான செலவை பிபிஎம் நிர்வாகமே செலுத்துகிறது. இதன் காரணமாகவே இந்த ரயில் சேவை வணிக சேவையாக இல்லாமல் இலவச சேவையாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பக்ரா நங்கல் அணையின் பாரம்பரிய அடையாளம்
இந்த ரயிலின் பெட்டிகள் மரத்திலானவையாகும். 1923-ல் அப்போது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த நகரமாக இருந்த கராச்சியில் இந்த ரயில் பெட்டிகள் கட்டப்பட்டது. துவக்கத்தில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது, டீசல் லோகோ மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் செல்லும் வழித்தடமும், அதன் பாரம்பரியம் மற்றும் இலவச பயணம் என்ற பெயரால் நாள்தோறும் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இயக்க செலவுகள் அதிகரித்ததால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரயில்வேயிடம் முழுமையாக ஒப்படைத்துவிடலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டதாம். அதுமட்டுமின்றி டிக்கெட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் பக்ரா நங்கல் அணையின் பாரம்பரிய அடையாளமாக இந்த ரயில் சேவை இருக்கட்டும் என முடிவு செய்யப்பட்டதால் மீண்டும் இலவச பயணம் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் என நூற்றுக்கணக்கானோர் இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
