தரமற்ற வேட்டி சேலைகளை ஒருபோதும் வாங்க மாட்டோம்.. உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடைபெறும் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜய் பாலாஜி தரமற்ற வேட்டி சேலைகளை அரசு ஒருபோதும் கொள்முதல் செய்யாது உற்பத்தியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள இலவச வேட்டி சேலை உற்பத்தி மையங்களில் கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு ம விஜய் பாலாஜி அவர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உற்பத்தி மையங்களில் நடைபெற்று வரும் தயாரிப்புப் பணிகளில் தரக்குறைபாடுகளும் அளவு குறைவாக இருப்பதையும் அமைச்சர் கண்டறிந்தார்.

ஈரோட்டில் ஆய்வு
இதையடுத்து சங்க உற்பத்தியாளர்களைக் கடிந்து கொண்ட அமைச்சர் தரமற்ற வேட்டி சேலைகளை அரசு ஒருபோதும் கொள்முதல் செய்ய முடியாது என விசைத்தறி உரிமையாளர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பொங்கல் 2027 வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்த உற்பத்தித் திறனாய்வுக் கூட்டம் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடந்தது.
அமைச்சர் வார்னிங்
இக்கூட்டம் கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் லில்லி, கைத்தறி இயக்குநர் உமா மகேஸ்வரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தரம் குறைபாடு உள்ள வேட்டி சேலைகளை அரசு ஒருபோதும் கொள்முதல் செய்யாது எனவும், உடனடியாகத் தரமான வேட்டி சேலைகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் உற்பத்தியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வளவு ஒதுக்கீடு
முன்னதாக பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் தரத்தில் இலவச வேட்டி - சேலை வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை துறை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.இதற்காக அப்போதே முதற்கட்டமாக 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ள நிலையில், கடந்தாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளைப் போலவே சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு , கரூர் மாவட்டங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நடப்பாண்டு கூடுதல் தரம் என்ன
வரும் பொங்கலுக்கு புதிய ரக நூலில் வேட்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்ககது.


Click it and Unblock the Notifications
