நாகர்கோவில் கொலை, செஞ்சி சிறுமி கள்ளக்குறிச்சி கலெக்டர், போதை பொருள்! விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி
சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளும், குற்றச் சம்பவங்களும் ஆளுங்கட்சிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
பெண்கள் பாதுகாப்பு, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ மீதான புகார் மற்றும் கடல் வழியாகத் தொடரும் போதைப்பொருள், தங்கம் கடத்தல் சம்பவங்கள் என அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

1. நாகர்கோவில் ரயில் நிலையக் கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊர்மிளா மார்க்கம் என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அய்யப்பன் என்பவர் கைது செய்யப்பட்டாலும், ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே இப்படியொரு கொடூரம் நடந்து 4 நாட்களாகத் தெரியாமல் போனது பாதுகாப்புக் குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையமும் தமிழக டிஜிபி-யிடம் அறிக்கை கேட்டுள்ளது.
2. 42 நாட்களாகியும் விடை கிடைக்காத செஞ்சி சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி ஹேமலதா மாயமாகி 40 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், "என் மகளை யார் கடத்தியிருந்தாலும் கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள், காலில் விழுந்து கெஞ்சுகிறேன்" எனச் சிறுமியின் தாய் கதறி அழும் காட்சி மக்களைக் கலங்க வைத்துள்ளது.
3. கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் நீதிபதி சரமாரி கேள்வி
அரசுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்தான். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ மீது ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும், காவல்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்ன என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன.
4. தமிழகத்தை உலுக்கும் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல்
மறுபுறம், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் வழியாக போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை நடத்தும் அடுத்தடுத்த சோதனைகள் காட்டுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிடிபட்ட முக்கியச் சம்பவங்கள்:
அக்டோபர் 16-17: நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்.
நவம்பர் 9-11: சென்னை துறைமுகத்தில் 12.87 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்.
நவம்பர் 12: மண்டபம் கடல் பகுதியில் 17.74 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.
நவம்பர் 17-18: சென்னை மாதவரத்தில் 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்.
நவம்பர் 22-23: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 1.75 கிலோ தங்கம் பறிமுதல்.
நெருக்கடியில் முதல்வர் விஜய்
ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே இத்தனை சவால்களை முதல்வர் விஜய் எதிர்கொண்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ள முதல்வர் விஜய், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இருப்பினும், காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, பெண்கள் பாதுகாப்பையும் போதைப்பொருள் தடுப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
