"தவெக அரசை நீதித்துறையோடு மோத வைக்க திமுக சதி" - அர்ஜுன் சம்பத் சொல்றத பாருங்க!
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து தவெக அரசை நீதித்துறையுடன் மோதவிட்டு அரசுக்கு நெருக்கடியை உருவாக்க திமுக திட்டமிடுகிறது என்றும் இதற்கு தவெக அரசு பலியாகிவிடக் கூடாது என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், திருப்பரங்குன்றம் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரும், கட்சி நிர்வாகிகளும் கோயில் முன் படுத்து உருண்டு, கார்த்திகை அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் எற்ற வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உரிமையை கடந்த ஆண்டு திமுக அரசு தடுத்து நிறுத்தியது. இந்த ஆண்டும் அதே உத்தரவு வந்துள்ளது. ஆனால், திமுக அரசைப் போலவே தவெக அரசும் வேண்டுமென்றே அரசியல் செய்து மதப் பிரச்சினையை கிளப்பிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு திமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் தற்போது விஜய்யுடன் உள்ளன. அவர்கள் கூட்டணிக்குள் இருந்துகொண்டே தவெக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எப்படியாவது தவெக அரசை நீதித்துறையோடு மோத வைக்க வேண்டும். அதன்மூலம் ஒரு அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்க வேண்டும்.
நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இது திமுகவின் மிகப்பெரிய சதித்திட்டம். இந்த சதிக்கு தவெக அரசு பலியாகிவிடக் கூடாது. தவெக கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு விசுவாசமாகவும், விஜய்க்கு எதிராகவும் வெளிப்படையாக செயல்படுகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதுதான் மாவட்ட ஆட்சியரின் வேலை. கடந்த ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டது எல்லோருக்கும் தெரியும். அதே செயலை தவெக அரசிலும் அதிகாரிகள் தொடர வேண்டியதில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தவெக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இது நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால். நீதிமன்ற உத்தரவு இறுதியானது. அதைச் செயல்படுத்த வேண்டியது அரசு இயந்திரத்தின் பொறுப்பு. தீபம் ஏற்றுவதால் எந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது. முருக பக்தர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள்.
இதைக் கெடுக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ கட்சிகளின் திட்டம். இதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற ஆட்சியரால் முடியாவிட்டால் நாங்கள் செயல்படுத்துவோம்.
1980களில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, தீபம் ஏற்றும் இயக்கத்தை முன்னெடுத்தனர். 1994ல் மலை மேல் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது தர்கா நிர்வாகம் தீபம் ஏற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என எழுதி கொடுத்தனர். இஸ்லாமியரின் ஓட்டுகளுக்காக அன்று இருந்த அரசுகள் தீபம் ஏற்ற வில்லை. மக்கள் இயக்கம் தொடர்ந்து நடந்தது. வழக்குகளும் தொடர்ந்து நடந்தன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எஸ்டிபிஐ அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு கோழிகளை பலியிட வந்தனர். அதை கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. பின்பு திருப்பரங்குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என அழைக்கக்கூடாது, ஆடு, கோழி பலியிடக்கூடாது என எங்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வழக்கு தொடர்ந்தார். அதில் வெற்றியும் கிடைத்தது.
நவம்பர் 24 ல் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை மேல் 2012ல் வெடிகுண்டு மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மலையை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது." எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
