கள்ளக்குறிச்சி MLA விவகாரம் முதல்வர் கவனத்தில் இருக்கு.. உண்மை இருந்தால் ஆக்ஷன்: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: "கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது: இந்த விவகாரத்தில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இரவு நேரத்தில் ஆட்சியர் வீட்டுக்கு அவர் சென்றதாகவும் கூறப்பட்டது. தான் அப்படி செய்யவே இல்லை என எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கூறினார்.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அப்படிச் செய்யவில்லை என்றே கூறி வந்தனர். காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷ் பாவம், அப்படி செய்யக்கூடியவராக தெரியவில்லை எனக் கூறினர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கணவர், தலைமைச் செயலரிடம் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மற்றொருபுறம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபி மஜேஷ் குமார் அகர்வாலுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், "கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
