திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய தாய், மகள்.. கூடவே இருந்து பார்க்கக்கூடாத வேலை
திருவள்ளூர் : திருவள்ளுர் அரசு மருத்துவமனை என்பது அந்த மாவட்டத்தின் மிக முக்கியமான பிரசவ மருத்துவமனையாக உள்ளது. சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கே பிரசவத்திற்காக வருகிறார்கள். அந்த வகையில் திருநின்றவூரை சேர்ந்த பிரியதர்ஷினிக்கு கடந்த அக்டோபர் மாத இறுதியில் குழந்தை பிறந்தது.குழந்தையை மருத்துவமனைக்கு அண்மையில் அழைத்து சென்றுள்ளார். அங்கு புறநோயாளிகள் பிரிவில் சீட்டு வாங்குவதற்காக சென்ற நேரத்தில் கடத்திவிட்டார்கள். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார், தாய், மகளை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி பிரியதர்ஷினிக்கு 19 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து 4 நாட்களுக்கு பிறகு பிரியதர்ஷினி குழந்தையுடன் வீடு திரும்பினார்.

கடந்த நவம்பர் 20-ந் தேதி திருநின்றவூர் பெரிய காலனி பள்ளத்தெருவை சேர்ந்த ஜெயபிரியா (20) மற்றும் அவரது தாயார் புவனா இருவரும் பிரியதர்ஷினியின் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளது. ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார்களாம்.
நம்பிய பிரியதர்ஷினி
இதை நம்பிய பிரியதர்ஷினி நேற்று முன்தினம் ஜெயபிரியா மற்றும் அவரது தாயார் புவனாவை அழைத்து கொண்டு தனது குழந்தையுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். மதியம் 2.30 மணியளவில் குழந்தைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக, புறநோயாளிகள் பிரிவில் சீட்டு வாங்குவதற்காக பிரியதர்ஷினி, ஜெயபிரியா இருவரும் காத்திருந்தனர். அப்போது குழந்தையை புவனாவிடம் கொடுத்து விட்டு சென்றனர்.
போலீசில் புகார்
அப்போது ஜெயபிரியா, பிரியதர்ஷினியிடம் தனது தாயார் குழந்தையை வைத்திருக்கும் போது மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புகார் கொடுக்க தனது தாயார் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். நாம் இருவரும் வீட்டுக்கு சென்று விடலாம். போலீசார் குழந்தையை மீட்டு உங்கள் வீட்டுக்கு வந்து கொடுத்து விடுவார்கள் என்றார். அதை நம்பிய பிரியதர்ஷினி, ஜெயபிரியாவுடன் வீட்டுக்கு சென்றார். ஜெயபிரியா சொன்னது போல குழந்தையை மீட்டு கொண்டு போலீசார் வராததால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அவருடன் ஜெயபிரியாவும், புவனாவும் சென்றனர்.
தொடர்ச்சியாக வந்த போன் கால்
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு இது குறித்து 3 பேரிடமும் விசாரித்துகொண்டிருந்த போது ஜெயபிரியாவின் செல்போனுக்கு தொடர்ச்சியாக போன் வந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் பாலகுரு ஜெயபிரியாவிடம் யார் என்று கேட்டார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம் பேசும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். மறுமுனையில் பேசிய பெண் பிரியாவா என கேட்டார். அப்போது நான் பிரியா இல்லை என ஜெயபிரியா இணைப்பை துண்டித்தார். இதனால் ஜெயபிரியா மீது சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அவரிடம் மீண்டும் போன் செய்யும்படி கூறியிருக்கிறார். மறுமுனையில் பேசிய பெண், குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. பால் கொடுக்க முடியவில்லை. குழந்தையை எப்போது வந்து வாங்கி கொள்வீர்கள் என்று கேட்டுள்ளார்.
குழந்தை இல்லை
போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயபிரியாவுக்கு குழந்தை இல்லாததும் அவர் கர்ப்பமாக இருப்பதாக மற்றவர்களிடம் கூறிவந்ததும் தெரியவந்தது. குழந்தையை கடத்தி சென்று சில நாட்களுக்கு பிறகு தனக்கு பிறந்த குழந்தை என்று கூறி அந்த குழந்தையை தான் எடுத்து கொள்ள திட்டமிட்டு தாயார் மூலம் குழந்தையை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தையை தந்துள்ளனர்
கடத்தி சென்ற குழந்தையை திருவள்ளூரை அடுத்த விஷ்ணுவாக்கத்தில் உள்ள தனக்கு அறிமுகமான லத்திகா (22) என்பவரிடம் கொடுத்து விட்டு, நான் அவசரமாக சென்னை செல்கிறேன். தனது மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகளை வைத்திருக்க முடியவில்லை கொஞ்ச காலம் பார்த்துக்கொள் என கூறி விட்டு சென்றாராம்.
கைதான தாய் மகள்
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலகுரு, ஜெயபிரியா மற்றும் புவனா இருவரையும் இரவோடு இரவாக விஷ்ணுவாக்கத்துக்கு அழைத்து சென்று லத்திகாவிடம் இருந்த குழந்தையை மீட்டு பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர். ஜெயபிரியா மற்றும் அவரது தாயார் புவனா ஆகியோரை திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையி அடைத்தனர்.
நட்பு பாராட்டும் பெண்கள்
குழந்தை இல்லாத பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை வருவோரிடம் நட்புடன் பழகி, குழந்தையை கடத்தி சென்ற சம்பவமும், அதற்கு அவரது தாய் உதவிய சம்பவமும் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரச வார்டுகளில் குழந்தைகளை கடத்தும் நோக்கில் நட்பு பாராட்டும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
