ரூ.1000-க்கு மேல் சரக்கு வாங்கினால் கேஷ் கிடையாது.. டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு.. என்ன பிரச்சினை?
சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.1000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் இனிமேல் பணத்தை ரொக்கமாக கொடுக்க முடியாது. யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகத்தான் பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், இந்த மாற்றத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.ஓ.எஸ். கருவிகளில் ஏற்கனவே நிலவி வரும் 8 வகையான தொழில்நுட்பக் குளறுபடிகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.. டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

டாஸ்மாக் - புதிய நடைமுறை
இதன் முதல் கட்டமாக சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தியம் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களிடம் ரொக்கமாக பணம் வாங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். கருவிகள் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது யு.பி.ஐ. ஸ்கேன் செய்து பணம் பெற வேண்டும்.
ஊழியர்கள் எதிர்ப்பு
அரசின் இந்த புதிய நடைமுறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம், ஏற்கனவே கடைகளில் பயன்படுத்தப்படும் பி.ஓ.எஸ். கருவிகளில் பல தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக 8 வகையான டெக்னிக்கல் பிரச்சனை இருப்பதாகவும், அவற்றை சரிசெய்யாமல் புதிய நடைமுறையை அமல்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதனால் முதலில் கருவிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன்பிறகு ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து புதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மாற்றம்
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள பகுதிகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்... அதேசமயம் ரூ.1,000 அல்லது அதுக்கும் குறைவான மதிப்புக்கு மதுபானம் வாங்கினால் வழக்கம்போல ரொக்கமாகவும் பணம் செலுத்தலாம்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கவும், பணப்பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக ஊழியர்கள் கூறுவதால், புதிய நடைமுறை எந்த அளவுக்கு சுமுகமாக செயல்படப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டெக்னிக்கல் கோளாறு
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தடுக்க டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்.. ஆனால் அதே நேரத்தில், பணம் செலுத்தும்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் கஸ்டமர்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் புதிய நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு கருவிகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்து, வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இல்லாமல் பணம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
