பஞ்சாப் விருந்தில் பெண் ஐஏஎஸ்-ஸிடம் அசிங்கம்.. இங்கே ஒரு கலெக்டருக்கே இந்நிலைமை? மதுரை நீதிபதி நறுக்
மதுரை: கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது புகார் எழுந்துள்ளது. ஒரு பெண் மாவட்ட கலெக்டருக்கே இப்படியொரு நிலை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், புகார் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதியே கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக தமிழக காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தற்போது நீதிபதியின் பேச்சும் இந்த விவகாரத்தில் கவனம் திரும்ப செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக தகவல்கள் பரபரத்தன.. மேலும், மதுபோதையில் கலெக்டரின் அரசு இல்லத்துக்கே சென்று தகராறு செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவியது.

கள்ளக்குறிச்சி கலெக்டர்
இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திமுக, அதிமுக தரப்பில் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அருள் விக்னேஷின் செயலை கண்டித்து, சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினார்கள்.. எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டும் என்று நாமக்கல்லிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அருள் விக்னேஷ், இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல் என்று தெரிவித்தார்.
மகளிர் ஆணையம்
எனினும், இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கும் சென்றது. மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், நவம்பர் 15-ம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. 7 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கேட்டிருந்தது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை
இப்படிப்பட்ட சூழலில், ஹைகோர்ட் நீதிபதி விக்டோரியா கவுரி பேசியது இந்த விவகாரத்தில் மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது. மதுரை லேடி டோக் கல்லூரியில், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
உயர்நீதிமன்றத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்தக் குழுவின் தலைவரும் நீதிபதியுமான விக்டோரியா கவுரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பணியிடங்களில் பாலியல் தொல்லை அல்லது துன்புறுத்தல் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது, யாரிடம் புகார் அளிப்பது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியுமா?
1988-ம் ஆண்டு பஞ்சாபில், நடந்த ஒரு விருந்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரூபன் தியோல் பஜாஜ் பங்கேற்றார்.. அப்போது அவரிடம், டிஜிபி கே.பி.எஸ். கில் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார். இந்த வழக்கில் கில்லுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.. அதில், குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
நீதிபதி காட்டமான கேள்வி
இப்போ கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தற்சமயம் இருக்கக்கூடிய ஒரு எம்.எல்.ஏ ஆபாச செய்தி அனுப்புகிறார். இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இல்லையா?
இந்த விவகாரம் தொடர்பாக பக்கத்து மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளார். அப்படியிருந்தும்கூட, மாநில அரசின் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரணப் பெண்களின் நிலை என்ன?" என்று கவலை தெரிவித்தார்.
நீதிபதியின் இந்தப் பேச்சு இப்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகளும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
