தமிழ்நாடு மின்சார வாரியம் ஈட்டிய அசாத்தியமான லாபம்? ஒரே ஆண்டில்.. உண்மையா என்ன?
சென்னை: 'தமிழ்நாடு மின்சார வினியோக கழகம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 60 கோடி லாபம் ஈட்டியுள்ளது' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முந்தைய நிதியாண்டில் ஈட்டிய ரூ.2 ஆயிரத்து 73 கோடி லாபத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு மின்சார வினியோக கழகம் ஈட்டிய மொத்த வருமானத்தில் சுமார் 32% அரசாங்க மானியம் மற்றும் நிதியுதவிகள் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சம் கோடி கடனில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் 4 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருப்பது எப்படி என்று பலருக்கும் கேள்விகள் வரும். அதற்கு காரணம், அரசு தந்த மானியங்கள் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக தரும் மானியங்கள் தான். எனினும் மின்சார கொள்முதல் செலவு கடந்த 2024-25ம் ஆண்டுடன், 2025-26ம் ஆண்டை ஒப்பிட்டால், ₹3,612 கோடி குறைந்துள்ளது. இதுவே ச தமிழ்நாடு மின்சார வினியோகக் கழகம் (டி.என்.பி.டி.சி.எல்) நடப்பு 2025-2026 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 60 கோடி லாபம் ஈட்ட காரணமாயிருக்கிது. இது முந்தைய நிதியாண்டில் ஈட்டிய ரூ.2 ஆயிரத்து 73 கோடி லாபத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு என்பதும் குறிப்பிட வேண்டிய அம்சம் ஆகும்.

கடன்கள் அதிகரிப்பு
கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி, அதன் மொத்தக் கடன்கள் ரூ.1.07 லட்சம் கோடியைத் தாண்டியிருந்தது. நிறுவனத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான 17-வது ஆண்டு அறிக்கையின்படி, மொத்தக் கடன்கள் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 523 கோடி ஆகும். இதில் ரூ.77 ஆயிரத்து 565 கோடி நீண்ட காலக் கடன்களாகும். இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 1,782 கோடியை விட அதிகம் ஆகும். 4 ஆயிரம் கோடி லாபம் என்று ஒரு பக்கம் கூறினாலும், ₹5,741 கோடி கடந்த ஆண்டை விட கடன் அதிகமாகும்.
செலவுகள் எவ்வளவு
நிறுவனத்தின் நிதிச் செலவுகளை பொறுத்தவரை 2024-2025 நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்து 517 கோடியாக இருந்தது. 2025-2026 நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 770 கோடியாக, 21.4 சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் நிதிச் செலவு ₹2,253 கோடி அதிகரித்துள்ளது . இதில் கடன்களுக்கான வட்டி செலவு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கடன் சுமை அதிகம் என்பதால், லாபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், நிறுவனத்தின் பெரும் கடன் சுமையைக் குறைக்கப் பெரிதாக உதவவில்லை. கோடைக்கால மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க, டி.என்.பி.டி.சி.எல் பலமுனை கொள்முதல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருக்கிறது.
வருமானம் எவ்வளவு
நிறுவனத்தின் மொத்த வருமானம் 2024-2025-ம் ஆண்டில் ரூ.1,00,417 கோடியாக இருந்தது. தற்போது ரூ.1,02,037 கோடியாக உள்ளது. அதாவது கடந்த நிதியாண்டை ஒப்பிடும் ₹1,620 கோடி வருமானம் அதிகம் வந்துள்ளது. இதில், வருமானத்தின் கிட்டத்தட்ட 32 சதவீதம் அரசாங்க உதவியில் (மானியங்கள் மற்றும் நிதியுதவிகள்) கிடைத்து வருகிறது. மின்சாரக் கொள்முதல் மிகப்பெரிய செலவினமாகத் தொடர்ந்தபோதிலும், அதன் செலவு ரூ.75 ஆயிரத்து 960 கோடியிலிருந்து ரூ.72 ஆயிரத்து 348 கோடியாகக் குறைந்திருக்கிறது
செலவுகள் என்ன
ஊழியர் நலச் செலவுகள் ரூ.8 ஆயிரத்து 976 கோடியில் இருந்து ரூ.9 ஆயிரத்து 587 கோடியாக அதிகரித்துள்ளது. தேய்மானம் மற்றும் மதிப்பிழப்புச் செலவுகள் ரூ.2 ஆயிரத்து 256 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மின்சாரக் கொள்முதல் செலவுகள் ரூ.2 ஆயிரத்து 256 கோடியாக இருந்தன. நிதிச் செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சாரக் கொள்முதல் செலவினம் குறைக்கப்பட்டதால் நிறுவனத்தின் லாபம் உயர்ந்துள்ளது.
மொத்தச் செலவுகள் ரூ.98 ஆயிரத்து 344 கோடியில் இருந்து ரூ.97 ஆயிரத்து 977 கோடியாகச் சிறிதளவு குறைந்திருக்கிறது. தமிழ்நாடு மின் வினியோக கழகத்தின் தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள முரண்பாடுகளால், அதன் நிகர லாபத்தில் ரூ.3,744.39 கோடி வரை குறைவதற்கோ அல்லது இழப்பு ஏற்படுவதற்கோ வாய்ப்புள்ளதாக தணிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
தணிக்கை முரண்பாடு
இந்த தணிக்கை முரண்பாடுகள் குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும் போது, தணிக்கையாளர்களுடன் இணைந்து கணக்குகளைச் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. நிகர லாபம் இந்த அளவுக்குப் பெருமளவில் குறையாமல் இருக்கத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகிறோம் என்றார்கள். அப்படி சமர்பித்த பின்னர் தான் உண்மையான நிகர லாபம் என்னவென்று தெரியவரும்.




Click it and Unblock the Notifications
