Bisleri குடிநீரில் அதிக ரசாயனமா? எங்கள் தயாரிப்பு எப்போதும் பாதுகாப்பானது! பிஸ்லரி நிறுவனம் விளக்கம்
மும்பை: மினரல் வாட்டரில் அதிக அளவில் ரசாயனம் இருந்ததாக வெளியான தகவலுக்கு பிஸ்லரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பிஸ்லரி குடிநீர் பாதுகாப்பானதுதான் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிஸ்லரி குடிநீரில் அதிக அளவு ரசாயனம் இருப்பதாக FSSAI நோட்டீஸ் அனுப்பிய தகவல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தன. இது சுமார் 14 மாதங்களுக்கு முன்பு அதாவது 2025 செப்டம்பர் மாதம் எங்களது 143 உற்பத்தி ஆலைகளில் ஒன்றான கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் நீரை சோதனை செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கோவா ஆலையிலிருந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்று்ம தர நிர்ணய ஆணையம் (FSSAI) 6 மாதிரிகளை கொண்டு சென்றனர். ஆரம்ப கட்ட சோதனையில் 5 மாதிரிகள் குடிநீர் தயாரிப்பதற்கான அனைத்து தர நிர்ணங்களையும் பூர்த்தி செய்திருந்தன. ஆனால் ஒரே ஒரு மாதிரியில் மட்டும் ஒரு லிட்டர் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவான 10 mg-க்கு பதிலாக 12 mg புரோமேட் (Bromate) இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பிஸ்லரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாதிரியை மறுபரிசோதனைக்காக FSSAI வேறு ஆய்வகத்திற்கு அனுப்பியிருந்தது. அந்த சோதனையில் புரோமேட் அளவு 10 மில்லிகிராமுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
https://t.co/qOBmfxcYj9
— BisleriZone (@BisleriZone) November 23, 2026
ஆனால் அதில் அதிக அளவில் பாலி நியூக்கியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை ஒரே மாதிரியில் இரு முறை நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றில் புரோமேட்டும் மற்றொன்றில் பாலி நியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களும் இருப்பதாக முரண்பாடான முடிவுகள் வந்துள்ளது. இதை தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்.

அதே மாதிரியை FSSAI அங்கீகாரம் பெற்ற வேறொரு ஆய்வுக் கூடத்தில் எங்கள் நிறுவனமே தனிப்பட்ட முறையில் சோதனைக்கு அனுப்பியிருந்தோம். அந்த சோதனையிலும் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேய இருந்தது உறுதியானது.
இந்த சோதனை முடிவுகளை இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி FSSAI மேற்கு மண்டல அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தோம். ஆனால் அதன் பிறகு அந்த ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் இந்த பிரச்சினை முடிந்ததாக நான் நினைத்தோம்.
இன்று வரை எங்கள் பிஸ்லரி நிறுவனத்திற்கு ஈமெயில் மூலமாகவோ இல்லை நேரடியாகவோ FSSAI அனுப்பியதாக சொல்லப்படும் எந்த நோட்டீஸும் வரவில்லை. குடிக்கும் நீரின் பாதுகாப்பிற்கே எங்கள் நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும். எங்களது 10 படி உற்பத்தி முறையில் 90-க்கும் மேற்பட்ட கடுமையான தர பரிசோதனைகளை நாங்கள் செய்கிறோம். எனினும் இந்த புரோமேட் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் விவகாரத்தில் FSSAI-க்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு நல்குவோம். பல ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற பிஸ்லரி குடிநீர் எப்போதும் குடிப்பதற்கு பாதுகாப்பானது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஸ்லரி குடிநீரில் புற்றுநோயை வரவழைக்கும் ரசாயனம் அதிக அளவில் இருப்பதால் 2006-ம் ஆண்டின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றது என FSSAI அறிவித்திருந்த நிலையில் அதற்கான விளக்கத்தை பிஸ்லரி அளித்து, தங்கள் நிறுவன குடிநீர் பாதுகாப்பானது என விளக்கியுள்ளது.




Click it and Unblock the Notifications
