ரயிலில் காலி பர்த் ஒதுக்கீடு விதிகள்: கன்பர்ம் டிக்கெட் பயணி ஏறாவிட்டால், அந்த சீட் யாருக்கு போகும்?
சென்னை: ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த ஒருவர் கடைசி நேரத்தில் வரவில்லையென்றால், அவரது பர்த் காலியாகவே கிடக்க வேண்டுமா? அந்த இடத்துக்காக காத்திருக்கும் இன்னொரு பயணிக்கு அதை வழங்க முடியாதா? இப்போது ரயில்வேயின் புதிய தொழில்நுட்பம் மூலம் இதற்கான வழி ஏற்பட்டுள்ளது. இதனால் 43 ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள ஒரு பழைய முறையையும் ரயில்வே மறுபரிசீலனை செய்து வருகிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்..!!
பொதுவாக ரயிலில் கன்பர்ம் செய்யப்பட்ட பர்த்தை ரிசர்வ் செய்த ஒருவர், திடீரென பயணத்துக்கு வராவிட்டால் அந்த இடம் காலியாகிவிடும். முன்பு இதுபோன்ற காலி இடங்களைக் கண்டறிந்து வேறு பயணிகளுக்கு ஒதுக்குவது அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல.. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

காலி பர்த்
ரயில் டிக்கெட்டுகளை சரிபார்க்கும் பரிசோதகர்களிடம் இதற்காகவே கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் ரயில்வேயின் முன்பதிவு கணினி அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்திருக்கும் ஒருவர் ரயிலில் ஏறாவிட்டால், அதை அந்தக் கருவியில் டிக்கெட் பரிசோதகரால் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அந்தப் பர்த் காலியாக இருப்பது உடனடியாகப் பதிவாகிறது.
யாருக்கு கிடைக்கும்?
இப்படி காலியாகும் பர்த்தை, ரயிலில் ஏற்கனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு விதிகளின்படி ஒதுக்க முடியும். இதற்கான வசதியும் ரயில்வேயின் கையடக்கக் கருவியில் உள்ளது.
அதாவது, பயணிகள் வராததால் காலியாகும் பர்த்தை அப்படியே வீணாக விடாமல், தகுதியுள்ள வெயிட்டிங் லிஸ்ட்டிலுள்ள பயணிகளுக்கு ஒதுக்க முடியும். அதன்பிறகும் பர்த்துகள் காலியாக இருந்தால், அடுத்த ஸ்டேஷனில் இருந்து அவற்றை கரண்ட் புக்கிங் மூலம் மற்ற பயணிகளுக்கு வழங்கவும் வழி இருக்கிறது.
இதனால் கடைசி நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எந்தப் பயணிக்கு பர்த் கிடைக்கும் என்பது ரயில்வேயின் முன்பதிவு விதிகள் மற்றும் முன்னுரிமையைப் பொறுத்தது. இந்த தொழில்நுட்ப மாற்றம்தான் இப்போது ரயில்வேயில் இன்னொரு விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பழைய சிஸ்டம்
கடந்த 1983-84-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த ஆர்ஏசி முறை. இதில் ஒரே கீழ் பர்த்தை 2 பயணிகள் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் 2 பேரிடமும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்த காலத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த ஒருவர் வரவில்லை என்றால், அவரது காலி பர்த்தை உடனடியாகக் கண்டறிந்து அடுத்த பயணிக்கு ஒதுக்குவது இப்போதுபோல எளிதாக இருக்கவில்லை. இதுபோன்ற சூழல்களில், வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆர்ஏசி முறை உதவியது.
ஆனால் இப்போது டிக்கெட் பரிசோதகர்களிடம் இருக்கும் கையடக்கக் கருவி மூலம் பயணம் செய்ய வராதவர்களின் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய முடிகிறது. காலியாகும் பர்த்துகளையும் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமைப்படி ஒதுக்க முடிகிறது. இதனால், இந்தப் பழைய முறை இன்னும் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரயில்வே பரிசீலனை
அதனால் 43 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஆர்ஏசி முறையை நீக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்ல, முழு பர்த் கிடைக்காமல் ஒரே பர்த்தை பகிர்ந்து கொள்ளும் பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவும் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற பயணிகளுக்கு கட்டணத்தின் ஒரு பகுதியைத் திரும்ப வழங்கும் முறையை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இந்தப் பழைய முன்பதிவு முறையை நீக்குவது குறித்து ரயில்வே இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. ஒருவர் ரயிலில் ஏறாமல் விட்டு செல்லும் பர்த்தை இன்னொரு பயணிக்கு வழங்கும் தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும்போது, 43 வருடங்களாக தொடரும் பழைய முறையில் மாற்றம் வருமா என்பதுதான் இப்போது ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!


Click it and Unblock the Notifications
