தீபம் சர்ச்சைக்கு மத்தியில் திருவண்ணாமலை தரிசனத்துக்கு இந்துக்களுக்கு VIP பாஸ் வழங்கிய முஸ்லீம் MLA
திருவண்ணாமலை: ஒருபக்கம் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மறுபக்கம், திருவண்ணாமலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்துக்களுக்கு சிறப்பு பாஸ்களை வழங்கி இருக்கிறார் இஸ்லாமியரான தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில், அங்கு தரிசனம் செய்திட தமது இந்து நண்பர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, விஐபி பாஸ் எனப்படும் சிறப்பு தரிசன அனுமதி சீட்டுகளை வாங்கி பலருக்கும் வழங்கியிருக்கிறார்.

கடைசியாக காமேஷ் என்பவரின் குடும்பத்தினர் திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள தமிமுன் அன்சாரி, விஐபி தரிசன அனுமதி சீட்டு பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தமிமுன் அன்சாரி நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது; அத்திவரதர் சாமியை தரிசிக்க தன்னுடைய இந்து நண்பர்களுக்கு அவர் அதிக அளவில் சிறப்பு தரிசன பாஸ் பெற்றுக் கொடுத்தது தமிழக அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சா்வே கல் என ஒரு தரப்பினரால் சொல்லப்படும் தூண் மீது தீபம் ஏற்ற உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீபம் ஏற்ற வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அதேசமயம், புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தியும் சில அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
திருப்பரங்குன்றத்தில் எப்போதும் போலவே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், சிக்கந்தர் தர்ஹாவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுற்றி பெரும் பரபரப்பு எழுந்து வருகிறது.
இப்படி, திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து இந்துத்வ அமைப்புகள் தீபம் ஏற்றுவதில் தீவிரம் காட்டி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மறுபக்கம், திருவண்ணாமலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்படுகிறது. அங்கு இந்துக்களுக்கு சிறப்பு பாஸ்களை வழங்கி இருக்கிறார் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி.



Click it and Unblock the Notifications
