தங்கம் விலை திடீரென உயர்ந்தது ஏன்? தொடர்ந்து உயருமா? இல்லை வீழ்ச்சியை சந்திக்குமா?
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சரிந்தபடியே இருந்த நிலையில் இன்று திடீரென அதிர்ச்சி கொடுத்து ஏறியது. அதுவும் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்துள்ளது. திடீரென இன்று தங்கம் விலை உயர்ந்தது ஏன்? இனிமேல் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் போகுமோ எனவும் நகைபிரியர்கள் கலக்கமடைந்துள்ள நிலையில் வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளதை இங்கு காணலாம்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது. தங்கம் விலை இன்னும் கொஞ்சம் குறையும், கடைக்கு போய் வாங்கிவிட வேண்டியதுதான் என காத்திருந்த நகைபிரியர்களுக்கு இன்றைய விலை உயர்வு கலக்கத்தை ஏற்படுத்தியது.

திடீரென தங்கம் விலை உயர காரணம் என்ன?
தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 92,800 -க்கு விற்பனையாகிறது. கடந்த இரு வாரங்களாக்கும் மேலாக குறைந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்தது ஏன் என்பது குறித்து நிபுணர்கள் தரப்பில் கூறும் போது பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியும் தங்கம் விலை சரிவுக்கு ஒரு காரணம் என்று கூறினர்.
பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் கவனம் தங்கம் பக்கம் திரும்பியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். அதேநேரத்தில் தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? விலை உயர்வு நீடிக்குமா? அல்லது விலை சரிந்து நகை பிரியர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தங்கம் விலை மேலும் சரியக் கூடும்
பங்குச்சந்தை சரிவு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2.6 சதவீதம் வரை உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,630 டாலரை எட்டியது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்தாலும், இந்த விலை ஏற்றம் நீண்ட காலத்துக்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியான ஒன்றாகத்தான் உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நிலவரம், பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளதால், முதலீட்டாளர்கள் அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே, வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்திக்கக்கூடும்.
வரும் நாட்களில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கலாம்
வெள்ளியை பொறுத்தவரை தொழிற்சாலைகளில் அதன் பயன்பாடு அதிகமாக இருப்பதால், தொழில்துறை உலோகங்களின் விலை சரிவும், வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வரும் நாட்களில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைய விலை உயர்வை மட்டும் வைத்து தங்கம், வெள்ளியின் சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாக கருத முடியாது.
ஏனெனில் முதலீட்டாளர்கள், அமெரிக்க பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகளை கவனிக்க வேண்டும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.





Click it and Unblock the Notifications
