ரத்தன் டாடா நிறுவனத்தில் வரிசையாக வெடிக்கும் மோதல்! மீண்டும் வெடிக்கும் அதிகார போட்டி! என்ன நடக்கும்
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடாவில் நிர்வாக ரீதியான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படவிருந்த நிலையில், நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த இயக்குநர் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா கோரிக்கை விடுத்துள்ளார்.
உப்பு முதல் விமானம் வரை அனைத்து பிஸ்னஸ்களிலும் இருக்கும் நிறுவனம் டாடா. இந்த டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸில் தான் இப்போது குழப்பம் வெடித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தை என்னவானாலும் பட்டியலிடக்கூடாது என்பதே நோயல் டாடாவின் நிலைப்பாடு. இருப்பினும், இதர பங்குதாரர்கள் டாடா சன்ஸை பட்டியலிட விரும்புகிறார்கள்.

டாடா சன்ஸ்
இந்த விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த இயக்குநர் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்க இருந்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிட வேண்டுமா அல்லது பட்டியலிடப்படாத நிறுவனமாக அது தொடர மாற்று வழியை கையாள வேண்டுமா என்பது குறித்து அதில் விவாதிக்கப்பட இருந்தது. இந்த சூழலில் தான் இயக்குநர் குழு கூட்டத்தை ஒத்திவைக்க நோயல் டாடா கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டத்தை ஒத்திவைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஒத்திவைப்பு
நவம்பர் 26ஆம் தேதி கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அதற்கான முக்கிய ஆவணங்கள் நவம்பர் 22ஆம் தேதிதான் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டதாக நோயல் டாடா சுட்டிக்காட்டியுள்ளார். முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ள கூட்டத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது போதாது என்பதே அவரது வாதம்.
பொதுவாக டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்துக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பே ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாற்று மறுசீரமைப்பு திட்டத்தையும் முறையாக பரிசீலித்த பிறகே பங்குச்சந்தை பட்டியல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என நோயல் விரும்புவதாக கூறப்படுகிறது.
பின்னணி
டாடா சன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை அதனிடம் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், 2022 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி, அதை வங்கி சாரா நிதி நிறுவனமாக அதாவது Upper-layer NBFC வகைப்படுத்தியது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த கட்டுப்பாட்டில் இருந்து டாடா சன்ஸ் வெளியேற முயன்றது. இதற்காக கடன்களை குறைப்பது தொடங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து தனியார் நிறுவனமாக இருக்க கோரிக்கை விடுத்தது. ஆனால், 2026 செப்டம்பரில் அதன் விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. விதிகளுக்கு உட்பட்டு பட்டியலிடும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.
நோயல் டாடா தீவிர முயற்சி
இதை தடுக்கவே நோயல் டாடா தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களை டாடா சன்ஸ் உடன் இணைக்க நோயல் டாடா முடிவு செய்திருக்கிறார். இதன் மூலம் அதன் வணிக மற்றும் நிதி கட்டமைப்பை மாற்ற நோயல் டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் NBFC என்பதில் இருந்து வெளியேறி, பங்குச்சந்தை பட்டியலை தவிர்க்க முடியும் என்பது அவரது கணக்கு. இருப்பினும், அதற்கான ஒப்புதல்கள் கிடைக்குமா என்பது பெரிய கேள்வி தான்.
அதேபோல டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதே பதவியில் நியமிக்கும் முடிவிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் அவரது மறுநியமனத்துக்கு ஆதரவு கிடைத்த நிலையில், நோயல் டாடா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த கூட்டத்தில் வேணு சீனிவாசன் பங்கேற்றது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி அந்த சர்ச்சையே முடியாத நிலையில் இப்போது இயக்குநர் குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
