பெரம்பலூர் விவசாயிக்கு வந்த லெட்டர்! ஆண்டு வருமானமே ரூ.75,000 தான்! ரூ.1.70 கோடி GST வரி கட்டணுமாம்!
பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ. 1.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட சொல்லி விவசாயி ஒருவருக்கு கடிதம் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அந்த விவசாயி மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்திருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி. கொஞ்சம் நிலம் வைத்துக் கொண்டு அதில் பயிரிட்டு தனது வாழ்வாதாரத்தை இவர் நடத்தி வருகிறார். இவருக்கு ஆண்டு வருமானமே மொத்தம் ரூ.75,000 தான். இப்படி இருக்கையில், ரூ. 1.70 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும் என்று அவருக்கு கடிதம் வந்திருப்பது சலசலப்பை கிளப்பி இருக்கிறது.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, வணிகவரித்துறையிடம் இருந்து கடிதம் ஒன்று வந்திருக்கிறது. கிருஷ்ணசாமிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், தனது நண்பர்களிடம் கொடுத்து படிக்க சொல்லி இருக்கிறார். கடிதத்தில் ஜிஎஸ்டி வரியை கட்டாமல் இருப்பதால் உடனடியாக நிலுவையில் இருக்கும் ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரியை கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள ஸ்ரீரங்க பாளையம் எனும் கிராமத்தில், தற்காலிக முகவரியில் இரும்பு கடையை நடத்தி வந்ததாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் வணிகம் நடந்ததாகவும் ஆனால், ஜிஎஸ்டி வரி கட்டாமல் நிலுவையில் இருப்பதால் உடனடியாக இந்த வரியை கட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை படித்து அதிர்ந்து போன விவசாயி கிருஷணசாமி, உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார். தனது ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை திருடி, தனது பெயரில் போலியான நிறுவனங்களை தொடங்கி.. அதன் மூலம் ஜிஎஸ்டி வரி ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கிருஷ்ணசாமி புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இரண்டு மூன்று நாட்கள் கழித்து தங்களை வந்து சந்திக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
இந்த மோசடி எப்படி நடந்தது?
சாதாரண ஜெராக்ஸ் கடை அல்லது முன்பின் தெரியாத நபர்களிடம் பகிரப்படும் ஆதார், வங்கி விவரங்கள் மூலம் அடையாள திருட்டு நடக்கிறது. அதாவது திருப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமல், ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி பதிவு பெறப்படுகிறது. எந்த பொருளையும் உண்மையில் வாங்காமலும், விற்காமல் பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்ததாக போலி ரசிதுகளை உருவாக்கி, அரசிடமிருந்து உள்ளிட்டு வரி வரவை மோசடி கும்பல் சட்ட விரோதமாக பெற்றுக்கொள்ளும்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்த போலி நிறுவனம் வரி செலுத்தாதையோ அல்லது கணக்குகளில் முறைகேடு இருப்பதையோ ஜிஎஸ்டி சாப்ட்வேர் கண்டறியும் போது.. சம்பந்தப்பட்ட முகவரிக்கு அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீஸ் மோசடி கும்பலுக்கு போகாது.. மாறாக உண்மையான முகவரிக்குதான் போகும். இப்படி ஏழை விவசாயி கிருஷ்ணசாமியும் சிக்கியிருக்கிறார்.




Click it and Unblock the Notifications
