பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை.. 837 பணியிடங்கள்.. யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 837 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. நாளை தான் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
பேங்க் ஆப் பரோடா இந்தியாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று. மத்திய அரசின் பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. இந்த வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பல ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாகவும் நேரடியாக வங்கியே தேர்வு நடத்தியும் நிரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கி 791 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவித் துணைத் தலைவர், சீனியர் மேனஜர் உள்பட பல்வேறு பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
காலிப்பணியிட விவரம்:
உதவித் துணை தலைவர் (குழு) - 08 பணியிடங்கள்
உதவித் துணை தலைவர் (முதலீடு) - 1 பணியிடங்கள்
உதவித் துணை தலைவர் (பிராந்தியம்) - 35 பணியிடங்கள்
உதவி துணைத் தலைவர் (முதலீட்டுத் தயாரிப்பு மேனேஜர்) - 2
சீனியர் மேனேஜர் - 791 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். எம்பிஏ உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே சமயம் இப்பணியிடங்களுக்கு பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.
சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு டிகிரி முடித்து இருப்பதோடு, NISM V A / NISM V D மற்றும்/அல்லது IRDA IC38 சான்று பெற்று இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், அல்லது நிதிச் சேவைத் துறையில் 'ரிலேஷன்ஷிப் மேனேஜர்' பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பானது 1.11.2026 தேதியின்படி கணக்கில் கொள்ளப்படும். இதன்படி, குறைந்தபட்சம் 35 வயது முதல் 50 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.
சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 24 வயதும், அதிகபட்சம் 35 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
ஊதிய விகிதம்:
விண்ணப்பதாரரின் தகுதிகள், அனுபவம், ஒட்டுமொத்தப் பொருத்தம், அவர் கடைசியாகப் பெற்ற ஊதியம் மற்றும் அந்தந்தப் பணிகளுக்கான சந்தை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் தேர்வு எழுத அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு 175 விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.




Click it and Unblock the Notifications
