தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் திடீர் குறைப்பு.. சென்னை ஆணையர், ஆட்சியர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து, 762 ரூபாயாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரை தினக்கூலியாக 832 ரூபாயாக நிர்ணயித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஊதியத்தை 762 ரூபாயாக குறைத்து கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வீதம் மாதத்துக்கு 2,100 ரூபாயை இழக்கின்றனர்.
மேலும், 2026 ஏப்ரல் முதல், அக்டோபர் 5 ஆம் தேதி வரை 70 ரூபாய் பாக்கி ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும். ஊதியத்தை 832-ல் இருந்து 762 ஆக குறைத்த உத்தரவை ரத்து செய்தும், மீண்டும் பழைய ஊதியத்தையே வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
