மத்திய அரசு சூப்பர் பிளான்.. தேசிய நெடுஞ்சாலையில் இனி உயிரை பறிக்கும் பள்ளங்களுக்கு இடமில்லை
டெல்லி: தேசிய நெடுஞ்சாலையில் திடீர் திடீரென வரும் ராட்சத பள்ளங்கள், கவனிக்கக்கூட முடியாத வகையில் மங்கி கடக்கும் சாலை குறியீடுகள், சாலையில் ஏற்படும் பழுதுகள், எரியாமல் போகும் விளக்குகள் போன்ற குறைபாடுகளை அதிகம் பார்த்துஇருப்பீர்கள்.இந்த விவகாரத்தில் கண்டும் காணதாது போல் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இருந்து வந்ததை பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் அப்படி தப்பிக்க முடியாது. கட்டாயம் சரி செய்தே ஆக வேண்டும்.
இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 50,000 கி.மீ. தூர சாலைகளை கண்காணிக்கும் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்ட டாஷ்கேம்கள் மூலம், 40 வகையான குறைபாடுகளை வாரந்தோறும் கண்காணிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

சாலைகளில் பள்ளங்கள்
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், " கேமராக்கள் மூலம் சாலைகளில் உள் பள்ளங்கள், சரியாக தெரியாத சாலை குறியீடுகள் போன்ற விவரங்கள் மற்றும் அமைந்துள்ள துல்லியமான இடம் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட சாலைப் பகுதிகளுக்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்களுக்கும் இவை பகிரப்படும்.
டாஷ்கேம்கள்
"இரண்டு அங்குல அளவிலான பள்ளங்களைக்கூட டாஷ்கேம்கள் கண்டறிந்துவிடும். தற்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குறைபாடுகளை சரிசெய்யத் தவறினால், ஒப்பந்த விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் அபராதம் கணக்கிடும் முறை தானியங்கி முறையில் செயல்படும். கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்று கூறினார்.
இனி கட்டாயம்
தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல நெடுஞ்சாலைப் பகுதிகளின் மோசமான பராமரிப்பு குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
92000 குறைபாடுகள்
டைம் ஆப் இந்தியா ஆங்கில ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, இந்த கண்காணிப்பு நடைமுறை தொடங்கப்பட்ட கடந்த இரண்டு மாதங்களில் டாஷ்கேம் பதிவுகள் மூலம் 92,088 குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 23% மங்கிய சாலை குறியீடுகள் தொடர்பானவை ஆகும். சுமார் 15% பள்ளங்கள் தொடர்பானவை. கண்டறியப்பட்ட குறைபாடுகளில் சுமார் 72% சரிசெய்யப்பட்டுள்ளது. 17% குறைபாடுகள் இன்னும் காலக்கெடுவைத் தாண்டியும் சரிசெய்யப்படாமல் உள்ளன.
காலக்கெடு நிர்ணயம்
தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி, பள்ளங்களை நிரப்ப ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு நாட்கள், செயலிழந்த விளக்குகள் மற்றும் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய ஒரு நாள், அங்கீகரிக்கப்படாத சாலை திறப்புகளை மூடுவதற்கு ஏழு நாட்கள் என கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒப்பந்ததாரர்களுக்கு செக்
இதுபற்றி தேசிய நெடுஞசாலை துறையின் மற்றொரு அதிகாரி கூறும் போது, " சாலை குறைபாடுகளின் விவரங்கள் ஆதாரங்களுடன் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் கள அதிகாரியும் மையப்படுத்தப்பட்ட சர்வரில் அவற்றைப் பார்க்க முடியும் என்பதால், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமில்லை. தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களும், உரிய நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது தங்களது பணிச்சுமையைக் குறைக்கும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். சரிசெய்யப்பட்ட குறைபாடுகளின் விவரங்கள் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவேற்றப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே, அவை சரிசெய்யப்பட்டதாக பதிவு செய்யப்படும்" என்றார்.
நெட்டிசன்களின் கருத்துகள்
முதல் நெட்டிசன் கூறுகையில், "சாலைகள் பயணிக்க ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்வதே மிகவும் முக்கியம். குறிப்பாக தமிழ்நாட்டில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் நூற்றுக்கணக்கான GPS புகைப்படங்களை என்னால் வழங்க முடியும். அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அமைச்சர்; இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அமைச்சர் அல்ல." என்று கூறியுள்ளார்.
இரண்டாவது நெட்டிசன் கூறுகையில், "கட்டுமானப் பணிகள் நடைபெறும் போதே, குறிப்பிட்ட முக்கிய கட்டங்களில், கட்டுமானத் தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு கட்டத்தின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே அடுத்த கட்டப் பணிகள் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும். பல நாடுகளில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது"என்று கூறினார்.
மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், " சாலை ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணித்தரம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தரநிலைகளிலும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தொழில்முறை மூன்றாம் தரப்பு ஆய்வாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
