வாட்ஸ் அப் வெப் பயன்படுத்தாதீங்க..அரசு ஊழியர்கள் , நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: அரசு மற்றும் முக்கியமான தகவல்கள் கையாளப்படும் அலுவலகச் சூழல்களில், அலுவலகக் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளளது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் இன்காக்னிட்டோ அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையை பயன்படுத்துங்கள். விழிப்புடன் இருங்கள். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்ததும் லாக் அவுட் செய்யுங்கள். உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் " என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU), அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்அப் வெப் இணைப்பைச் சில சூழ்நிலைகளில் தவறாகப் பயன்படுத்தி, பயனரின் வாட்ஸ்அப் கணக்கை அனுமதியின்றி அணுக முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளது.
இத்தகைய அங்கீகரிக்கப்படாத அணுகல் மூலம், தீங்கிழைக்கும் நபர்கள் பயனரின் குறுஞ்செய்திகளைப் படிக்கவும், அந்தப் பயனரைப் போலவே ஆள்மாறாட்டம் செய்து செய்திகளை அனுப்பவும், தொடர்புகள் மற்றும் குழு உரையாடல்களை அணுகவும் முடியும். மேலும், கணக்கின் உரிமையாளர் மீது மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி, போலி இணைப்புகள் மூலம் தகவல்களைத் திருடுதல், சமூகப் பொறியியல் தாக்குதல்கள் மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
எனவே, அலுவலகக் கணினிகள், பலர் பயன்படுத்தும் கணினிகள், பொது இடங்களில் உள்ள கணினிகள் அல்லது மற்றவர்களால் அணுகக்கூடிய சாதனங்களில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. அலுவலக மற்றும் முக்கியமான பணிகளுக்கு வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அரசு தொடர்பான பணிகள், நிறுவனப் பணிகள், நிதி விவரங்கள், ரகசியத் தகவல்கள் அல்லது பிற முக்கியமான தகவல்களை கணினிகளில் உள்ள வாட்ஸ்அப் வெப் மூலம் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.
2. வாட்ஸ்அப் வெப் இணைப்பை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டாம்.
தேவை இல்லாத நேரங்களில், குறிப்பாக அலுவலகக் கணினிகள் அல்லது பலர் பயன்படுத்தும் கணினிகளில், வாட்ஸ்அப் வெப் கணக்கைத் தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க வேண்டாம்.
3. ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்ததும் கட்டாயம் லாக் அவுட் செய்யவும்.
வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டை முடித்ததும், அதிலிருந்து கைமுறையாக லாக் அவுட் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிரவுசர் விண்டோ அல்லது டேப்பை மூடுவது மட்டுமே லாக் அவுட் செய்வதற்குச் சமம் அல்ல.
4. தவிர்க்க முடியாத சூழலில் இன்காக்னிட்டோ அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்தவும்.
வாட்ஸ்அப் வெப்-ஐ தற்காலிகமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நம்பகமான கணினியில் இன்காக்னிட்டோ அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்தவும். பிரவுசரை மூடுவதற்கு முன்பு கைமுறையாக லாக் அவுட் செய்ய வேண்டும்.
5. தெரியாத அல்லது பொது இடங்களில் உள்ள கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
சைபர் கஃபேக்கள், பொது கணினி மையங்கள், ஹோட்டல்களில் உள்ள வணிக மையங்கள், மற்றவர்களிடம் கடன் வாங்கிய கணினிகள் அல்லது நம்பகத்தன்மையற்ற கணினிகளில் வாட்ஸ்அப் வெப் கணக்கைத் திறக்க வேண்டாம்.
6. கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் அனுப்பாத செய்திகள் அனுப்பப்படுவது, உங்கள் தொடர்பில் இருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக பதிலளிப்பது அல்லது உங்களுக்குத் தெரியாமல் கணக்கில் செயல்பாடுகள் நடைபெறுவது போன்றவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
உங்கள் கம்ப்யூட்டரில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பிரவுசர் மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களை அடிக்கடி அப்டேட் செய்து, அப்டேட் என்கிற நிலையில் வைத்திருங்கள். சந்தேகத்திற்குரிய பதிவிறக்கங்கள், தெரியாத கோப்புகள், சட்டவிரோதமாக மாற்றப்பட்ட மென்பொருள்கள் (Cracked Software) மற்றும் நம்பகத்தன்மையற்ற சாப்ட்வேர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்" இவ்வாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
