ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு என்பதற்கு சுய ஒப்புதல் சான்று!.. சீராய்வு மனுவால் விளாசிய வானதி
கோவை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீராய்வு மனு என்பது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இந்து விரோத அரசு என்பதற்கான சுய ஒப்புதல் சான்று என்றும் விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறியதாவது: "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், வரும் 24ம் தேதி, கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்ற வேண்டும்" என்று, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

எந்தப் பிரச்சனையும் இல்லை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ள இடம், கோவிலுக்குச் சொந்தம் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே அங்கு, சில மணி நேரம், தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, செயல்படுத்தி இருக்க வேண்டும்.
இந்து விரோத அரசு
ஆனால், திமுகவின் ஹிந்து விரோத போக்கை அப்படியே பின்பற்றி வரும் ஜோசப் விஜய் அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு என்பது, "ஜோசப் விஜய் அரசு, இந்து விரோத அரசு" என்பதற்கான சுய ஒப்புதல் சான்றிதழ். இந்துக்கள் இளிச்சவாயர்கள். அவர்களை எப்படியும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்த திமுகவைப் போல, தவெகவும் செயல்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முருகனின் தண்டனை நிச்சயம்
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் திமுக அரசு அழிச்சாட்டியம் செய்தது. தீர்ப்பளித்த நீதிபதியையே பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்தது. அந்த திமுகவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை, முதலமைச்சர் ஜோசப் விஜய் யோசித்துப் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜோசப் விஜய் அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இல்லையெனில், முருகப்பெருமான் தரும் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது.


Click it and Unblock the Notifications
