கமல்ஹாசனின் சண்டியர் படத்தால் மீண்டும் சர்ச்சை! 2004 விவகாரத்தை கையில் எடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் புதிய படத்துக்கு மீண்டும் "சண்டியர்" என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியுடன் களமிறங்கியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. 2004-ம் ஆண்டிலேயே தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட பெயரை இப்போது மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 23 ஆண்டுகளாக இதே பெயரை மனதில் வைத்திருந்தாரா கமல்ஹாசன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி,

சினிமா என்பது பொழுதுபோக்குடன் முடிந்துவிடுவதில்லை. திரையில் காட்டப்படும் விஷயங்கள் இளைஞர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் கிருஷ்ணசாமியின் முக்கிய வாதம். அரிவாள், துப்பாக்கி, ஆபாசம், பழிக்குப் பழி என வன்முறையை ஹீரோயிசமாகக் காட்டும் படங்கள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. அதனால் சினிமா துறையில் மாற்றம் வந்தால்தான் சமூகத்திலும் மாற்றம் வரும் என்கிறார்.

Kamal Haasan

டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: "சமீபகால சினிமாக்கள்தான் தமிழ் சமூகத்தில் இளைஞர்கள் மத்தியில் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்குகின்றன. ஆபாசமான காட்சிகள், அரிவாள் கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் போன்றவை சினிமாக்களில் அதிகரித்து வருகின்றன.

பெண்கள்கூட பார்க்கவும் கேட்கவும் முடியாத அளவுக்கு சில காட்சிகள் இடம்பெறுகின்றன. தமிழ் சமூகம் தவறான பாதையில் செல்வதற்கு திரைப்படங்களும் முக்கியக் காரணமாக இருக்கின்றன.

அதனால் இனிமேல் திரைப்படங்களில் ஆபாசத்துக்கு இடமிருக்கக் கூடாது. அரிவாள், துப்பாக்கி கலாச்சாரத்துக்கும் இடமில்லை. சாதியை உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறோம் என்பதற்காக எந்தக் காட்சியையும் வைக்கலாம் என்ற நிலை மாற வேண்டும். இதற்காகத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம், நடிகர்களை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய சொத்துகளையும் வீடுகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சில நடிகர், நடிகைகளின் வாழ்க்கைக்காக தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இருக்கிறது.

கமலுக்கு கேள்வி

இந்த பின்னணியில்தான் கமல்ஹாசனின் புதிய படத்துக்கு மீண்டும் 'சண்டியர்' என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 2004-ம் ஆண்டிலேயே இதே பெயர் தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தமிழக அரசு அறிவுரை வழங்கியதும் கமல்ஹாசன் பெயரை மாற்றிக்கொண்டார். அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பெயரை ஏன் கொண்டுவர வேண்டும்?

கமல்ஹாசன் 250 படங்களுக்கு மேல் நடித்தவர். இத்தனை ஆண்டுகளில் அவர் வேறு பெயர்களில் பல படங்களை எடுத்திருக்கிறார். எந்தப் படத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட பெயரை மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

ரிவெஞ்ச், பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்று பேசுவதன் பொருள் என்ன? ஒரு பொறுப்பான அரசியல் கட்சியை நடத்துபவரின் கொள்கை இதுதானா? வெட்டுக்கு வெட்டு, குத்துக்கு குத்து, ரத்தத்துக்கு ரத்தம் என்பதுதான் கட்சியின் கொள்கையா? இந்த கேள்விகளை பத்திரிகையாளர்கள் கமல்ஹாசனிடம் நேரடியாகக் கேட்க வேண்டும். சண்டியர் என்று பெயர் வைப்பதன் மூலம் தமிழ் சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதற்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.

பெயரின் பின்னணி

சண்டியர் என்றால் மக்களுக்காக நிற்பவர், மக்களுக்கு உதவி செய்பவர் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த பொருள் எந்த தமிழ் அகராதியில் இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். தென் தமிழகத்தில் அந்தச் சொல்லுக்கு வேறொரு வரலாற்று பின்னணி இருக்கிறது.

தமிழகம் 64 பாளையங்களாக பிரிக்கப்பட்ட காலத்தில், ஜமீன்களின் கீழ் மக்களை அடக்கி ஆளும் பணியில் சண்டியர் என்ற பெயரில் சிலர் இருந்தனர்.. அவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு, கட்டுப்படாத மக்களை அடித்து தண்டிக்கும் வேலைகள் நடந்தன..

மகாபாரதத்தில் தருமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறோம். ஆனால் துரியோதனன், சகுனி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஒரு பெயருக்குப் பின்னால் அதன் பொருளும் வரலாறும் இருக்கின்றன. தென் தமிழகத்தில் 'சண்டியர்' என்ற சொல்லுக்கு இருக்கும் பொருளையும் அதன் தாக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இளைஞர்கள் பாதிப்பு

திரைப்படங்களில் ரவுடிகளை ஹீரோக்களாகக் காட்டும்போது, இளம் வயதினர் அவர்களைப் போலவே நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 17, 18 வயது இளைஞர்கள் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்து வன்முறையைப் பின்பற்றும் நிலை உருவாகிறது. கடந்த 30, 40 ஆண்டுகளாகத் தென் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் பரவியதற்கும் இதுபோன்ற திரைப்படக் காட்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 200 முதல் 250 இளைஞர்கள் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுக்களை போலீசார் முடக்கியுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் அரிவாள் படங்களைப் பதிவிடுவது தொடர்பாக போலீஸ் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்தத் தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளை ரவுடிகளாக வளர்க்க விரும்ப மாட்டார்கள். அப்படியிருக்க, வன்முறையை சினிமாக்களில் ஹீரோயிசமாகக் காட்டுவது ஏன்?

இதற்கு முன்பும் திரைப்படங்களின் பெயர்கள், வசனங்கள், காட்சிகள் தொடர்பாகப் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கொம்பன், பாய்ஸ், மாயி உள்ளிட்ட படங்கள் தொடர்பான சர்ச்சைகளையும், நான் காந்தி அல்ல என்ற பெயர் நான் மகான் அல்ல என்றெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன. பாகுபலி, மண்டேலா' படங்களில் இடம்பெற்ற சில சொற்கள் தொடர்பாகவும் எதிர்ப்புகள் எழுந்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

போராட்ட அறிவிப்பு

ஏற்கனவே சண்டியர் படத்தின் பெயரை மாற்றி படப்பிடிப்பு நடந்தலாம் என 10 நாள் முன்பு கூறி இருந்தோம் ஆனாலும் நாங்கள் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டோம் என்பது போல் படக்குழுவினர் மீண்டும் சண்டியர் என்ற தலைப்பிலே போஸ்டர் ஓட்டி உள்ளனர்.

கமல்ஹாசன் சண்டியர் என்ற பெயரை மாற்றிவிட்டு வேறு பெயரில் படத்தைத் தொடர்வதில் எந்தத் தடையும் இல்லை. இதற்காக 7 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. பெயரை மாற்றாவிட்டால் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் இறங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

திரையுலகமே திரும்பி பார்

தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து, 2004-ம் ஆண்டில் நிராகரிக்கப்பட்ட பெயரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து சென்சார் போர்டிடம் மனு அளிக்கவும், "திரையுலகமே திரும்பி பார்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியினரைத் தாண்டி, சமூக அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றெல்லாம் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+