‘சண்டியர்'.. 23 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை டைட்டிலை கையிலெடுத்த கமல்ஹாசன்! பின்னணி
நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் தான் நடிக்கும் புதிய படத்துக்கு 'சண்டியர்' என பெயர் வைத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டில் வெளியான 'விருமாண்டி' திரைப்படத்துக்கு முதலில் 'சண்டியர்' என பெயர் வைக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 'விருமாண்டி' என பெயர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்கு மீண்டும் 'சண்டியர்' பெயரை கமல்ஹாசன் தனது திரைப்படத்துக்கு பயன்படுத்துவது கவனம் பெற்றுள்ளது.

நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 237 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் எஸ்யூ. அருண் குமார் இயக்குகிறார். இவர் 'பண்ணையாரும் பத்மினியும், வீர தீர சூரன்,சேதுபதி, சித்தா' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. இதனால் KH237 (கமல்ஹாசன் 237) என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இன்று கமல்ஹாசனின் புதிய படத்தின் 'பர்ஸ்ட்லுக்' போஸ்டர் வெளியானது.
இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷன்ல் தயாரக்கிறது. இந்த திரைப்படத்துக்கு 'சண்டியர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தேர்வு செய்துள்ள இந்த 'சண்டியர்' பெயர் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய டைட்டிலாகும்.
கடந்த 2004ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் 'விருமாண்டி' திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்துக்கு முதலில் 'சண்டியர்' என பெயர் வைக்கப்பட்டது. இது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக 2003ம் ஆண்டில் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக இந்த டைட்டிலுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரிடம் 'சண்டியர்' என்ற சொல் பிரபலமாக உள்ளது. இது அந்த சமுதாயத்தின் ஆதிக்கபோக்கை காட்டும் வகையில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக கமல்ஹாசன் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவையும் சந்தித்து பேசியிருந்தார். பிறகு'சண்டியர்' என்ற பெயருக்கு பதில் 'விருமாண்டி' என பெயர் வைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2014ல் 'சண்டியர்' என்ற பெயரில் நடிகர் ஜெகன், நடிகை கயல் நடிப்பில் திரைப்படம் வெளியானது. அப்போது எந்த சர்ச்சையும் உருவாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் கமல்ஹாசன் தனது புதிய படத்திற்கு 'சண்டியர்' என பெயர் வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
