கமல் நடு வீட்டில் நுழைந்த பாம்பு.. இதே வேலையா இருக்கார்.. சண்டியர் விவகாரம் கிருஷ்ணசாமி காட்டம்
சென்னை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிவிட்டது. இதுவரை இல்லாதளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். கமல்ஹாசன் சண்டியர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் நடு வீட்டிற்குள் நுழைந்த பாம்பு. தமிழகத்தில் வன்முறையை விதைப்பதையே அவர் வேலையாக வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தலைமை செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி, "சண்டியர் என்கிற பெயரை கமல்ஹாசன் மட்டுமல்ல யாருமே வைக்க கூடாது. சிலவை நம் கண்ணில் படாமல் போயிருக்கலாம். கமல் நடிப்பதற்கும் பிறர் நடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கமல்ஹாசன் கத்தியை தூக்குகிறார். வன்முறையை தூண்டுகிறார் என்றால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

கமல் நோக்கமே தவறு
சண்டியர் என பெயர் வைத்து ரத்தம் சொட்ட சொட்ட வன்முறையை தானே அவர் காட்ட போகிறார். பிறகு என்ன காதல் செய்வதது போலவா காட்ட போகிறார். சண்டியர் தி ரிவஞ் (பழிக்கு பழி) என போடுகிறார்கள். இதை சமுதாயத்தில் எப்படி அனுமதிக்க முடியும். வன்முறைக்கு வித்திடுவதே அவரின் குற்கோளாக உள்ளது. ரத்தத்தில் நடப்பதை ரத்தத்தால் தீர்ப்போம் என்கிறார். இதை எப்படி ஏற்க முடியும். அவரின் நோக்கமே தவறாக உள்ளது.
தன்னை படைப்பாளி என்று சொல்கிறார். அவருக்கு வேறு எதுவுமே படைக்க தெரியாதா. மக்களிடம் விரோதம், சாதி சண்டை உருவாக்குவதை மட்டும் தான் படைக்க முடியுமா. இதுதான் படைப்பாளிக்கு அர்த்தமா. மற்றவர்கள் செய்வதெல்லாம் யாரின் பார்வைக்கும் செல்வதில்லை. மக்களும் அதை கண்டுகொள்வதில்லை. ரோட்டுக்கு வரும் பாம்பை தான் அடிக்க முடியும். புதருக்குள் வரும் பாம்பையா அடிக்க முடியும். கமல் நடு வீட்டிற்குள் வரும் பாம்பு.
இளைஞர்களை சண்டியராக்க முயற்சி
இதே கமல்ஹாசன் 1993 ஆம் ஆண்டு தேவர்மகன் படம் எடுத்தார். அது சாதி சார்பற்ற படம் இல்லை என கூறினார். போற்றிப்பாடாடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே என பாடல் வைத்தார். அந்த பாட்டை அந்த சாதியினர் அவர்களின் வளாகங்களில் போட்டு கொண்டால் பிரச்சனையல்ல. மாற்று சமுதாயத்தினர் திருமண விழாக்களில் அந்த பாடலை போட வற்புறுத்துகிறார்கள். வேறு படம் ஒளிபரப்பாகும்போதும் இந்த பாடலை போட சொல்லி வன்முறை நடந்துள்ளது.
கமல் பிரபலமான நடிகர். அவர் பரப்பும் கெட்ட கருத்து விரைந்து பரவும். அவரின் அந்தப் படம் தான் தமிழகத்தில் 10 வருடங்கள் வன்முறை இருப்பதற்கு காரணம். கமல்ஹாசன் சண்டியர் மூலம் தமிழகத்தில் வன்முறையை, விரோதத்தை விதைக்க நினைக்கிறார். தமிழக இளைஞர்களை சண்டியர்களாக உருவாக்க பார்க்கிறார். இன்ஜினியர்கள், டாக்டர்களை உருவாக்குவதை விட்டு ரௌடியிசத்தை உருவாக்க நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.



Click it and Unblock the Notifications
