இந்த' ஒரு நம்பரை வைத்து போலி வாட்டர் பாட்டில் தண்ணீரை கண்டுபிடிப்பது எப்படி?
சென்னை: எந்த குடிநீர் பிராண்டும் செல்லுபடியாகும் FSSAI உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பாட்டிலில் உள்ள 14 இலக்க உரிம எண்ணை வைத்து எளிதாக போலி வாட்டர் பாட்டில் தண்ணீரை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். FOSCoS இணையதளம் அல்லது FSSAI WhatsApp Chatbot மூலம் குடிநீர் பிராண்டின் பெயர் மற்றும் அவர்களின் லைசென்ஸ காலம் ஆகியவற்றை சில நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

ஒழுங்குமுறை மாற்றம்
நாம் குடிக்கும் வாட்டர் பாட்டில் தரமானதா என்று சந்தேகப்படும் அளவிற்கு பிரபலமான பிராண்டுகளில் கூட போலிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. பெரிய ஓட்டல்களில் விற்கும் உணவுகள் எல்லாம் தரமானது என்று எப்படி கண்மூடித்தனமாக நம்புகிறரோமோ அதுபோல் பிரபலமான பெயர்களில் வரும் குடிநீர் பாட்டில்கள் எல்லாம் சரியானது என்றே நம்புகிறோம். ஆனால் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர்கள் எல்லாம் தரமானது கிடையாது. அண்மையில் நடத்திய ஆய்வில் பிரபல வாட்டர் பாட்டில் நிறுவனமே சிக்கியிருக்கிறது. எனவே நாம் குடிப்பது தரமான பாட்டில் குடிநீர் தானா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
தற்போதைய நிலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர்களுக்கு கட்டாய BIS முத்திரை தேவையை FSSAI நீக்கியுள்ளது. FSSA யின் பரிசோதனைத் திட்டம் கடந்த 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. எனினும் FSSAI உரிமம் தொடர்ந்து கட்டாயமாக உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியவற்றை பார்ப்போம்.
FSSAI உரிமத்தைச் சரிபார்ப்பது ஏன் முக்கியம்?
இந்தியாவில் ஆண்டுதோறும் 20 பில்லியன் லிட்டருக்கும் அதிகமான பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டில் தண்ணீரும் பாதுகாப்பானது கிடையாது. கடந்த பத்தாண்டுகளில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. ஆனால் உரிமம் இல்லாத உற்பத்தியாளர்கள், போலி பிராண்டுகள் மற்றும் தரமற்ற சுத்திகரிப்பு முறைகளும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தான், இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை ஒழுங்குபடுத்துகிறது. முறையான உற்பத்தியாளர் ஒவ்வொருவரும் செல்லுபடியாகும் FSSAI உரிமம் கட்டாயம் வாங்கி வைத்திருக்க வேண்டும். இந்த உரிமத்தை நீங்கள் சரிபார்ப்பதன் மூலம், உற்பத்தியாளர் தேசிய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதையும், ஆய்வு, பரிசோதனை மற்றும் விதிமுறைகளின் செயல்படுகிறவரா என்பதை உறுதிபடுத்த முடியும். FSSAI உரிம நம்பர் இல்லாத பாட்டிலை குடித்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
குறிப்பாக
* E. coli மற்றும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களால் கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
* முறையற்ற வடிகட்டுதல் காரணமாக ஈயம், ஆர்சனிக் மற்றும் பாதரசம் கலக்கலாம்.
* டிப்படை வடிகட்டிகளால் நீக்கப்படாத விவசாயக் கழிவுகள் தண்ணீரில் இருக்கலாம்.
* உணவு பயன்பாட்டிற்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்களிலிருந்து ரசாயனங்கள் கசியலாம்.
எனவே வெறும் ஐந்து நிமிடத்தில் FSSAI உரிம எண்ணை நீங்கள் கண்டுபிடித்துவிட முடியும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலை எடுத்து, அதன் லேபிளைச் சரிபாருங்கள். FSSAI உரிம எண் 14 இலக்கக் குறியீடாகும். இது லேபிளில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக இது பின்வரும் விவரங்களுக்கு அருகில் இடம்பெற்று இருக்கும்.
* உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி
* பேட்ச் எண் மற்றும் பேக்கிங் தேதி
* பயன்படுத்த வேண்டிய கடைசி தேதி
இந்த எண் 1xxXXXXXXXXXXX என்ற வடிவத்தில் இருக்கும். அதாவது 14 இலக்கத்தில் எண்கள் முழுமையாக இருக்கும்.
20 லிட்டர் பெரிய குடிநீர் ஜார்களில் என்றால், உரிம எண் பின்வரும் இடங்களில் இருக்கலாம்:
* ஜாரின் மூடி அல்லது சீல்
* ஜாரின் உடலில் ஒட்டப்பட்ட லேபிள்
* விநியோக ரசீது அல்லது பில்
பேக்கேஜிங்கில் எங்கும் FSSAI எண் தெரியவில்லை என்றால், அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டாம். இது FSSAI விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட குடிநீர் ஆகும். இந்த FSSAI உரிம எண் போடப்பட்டிருந்தாலும் அப்படியே விட்டுவிடாதீர்கள். FSSAI ஆன்லைன் இணையதளமான foscos.fssai.gov.in. சைட்டிற்கு செல்லுங்கள்
சரிபார்ப்பதற்கான வழிமுறை:
1. இணையதளத்திற்குச் சென்று "Search Licensed Business" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
2. தேடல் வகையில் "License Number" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பாட்டிலில் உள்ள முழு 14 இலக்க FSSAI உரிம எண்ணை பதிவிடுங்கள்
4. CAPTCHA சரிபார்ப்பை முடிக்கவும்.
5. "Search" என்பதை அழுத்த வேண்டும்.
அப்போது உரிமம் தொடர்பான பின்வரும் விவரங்கள் காட்டப்படும்:
* நிறுவனத்தின் பெயர் மற்றும் வணிகப் பெயர்
* பதிவு செய்யப்பட்ட முகவரி
* உரிமத்தின் நிலை (Active / Suspended / Cancelled)
* செல்லுபடியாகும் காலம் (தொடக்க மற்றும் முடிவு தேதிகள்)
* உணவு வகை (இதில் "Packaged Drinking Water" இடம்பெற்றிருக்க வேண்டும்)
இணையதளம் "No records found" என்று காட்டினால், அந்த உரிம எண் போலியானதாக இருக்கலாம் அல்லது தவறாக உள்ளிடப்பட்டிருக்கலாம். அதை உறுதிப்படுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். அதேபோல் பிராண்டின் பெயர் மற்றும் முகவரியை ஒப்பிட்டுப் பாருங்கள். செல்லுபடியாகும் உரிமம் இருப்பது மட்டும் போதாது. அந்த உரிமம் உங்கள் பாட்டிலில் உள்ள பிராண்டுக்குச் சொந்தமானதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். அவை போலியாக இருந்தாலும் குடிக்க வேண்டாம். குறிப்பாக "Packaged Drinking Water" அல்லது "Mineral Water" என்ற வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
WhatsApp மூலம் FSSAI உரிமத்தைச் சரிபார்ப்பது எப்படி
FSSAI உரிமத்தை உடனடியாகச் சரிபார்க்க WhatsApp Chatbot வசதியும் வழங்கப்படுகிறது. சைட்டிற்கு கூட போக தேவையில்லை
1. +91 88000 09911 என்ற எண்ணை "FSSAI Verify" என்ற பெயரில் உங்கள் மொபைலில் சேமியுங்கள்.
2. WhatsApp*ல் "Hi" என்று செய்தி அனுப்பவும்.
3. உரிமம் சரிபார்ப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. 14 இலக்க FSSAI உரிம எண்ணை உள்ளிடவும்.
5. உடனடியாக சரிபார்ப்பு முடிவைப் பெறவும்.
இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும், கடை அல்லது உணவகத்தில் இருக்கும்போது ஒரு பிராண்டை உடனடியாகச் சரிபார்க்க இது பயனுள்ளதாக இருக்கும்.
உரிமம் செல்லாததாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு தண்ணீர் பிராண்டின் FSSAI உரிமம் போலியானது, காலாவதியானது அல்லது பொருந்தாதது என்று பார்த்தால், உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். அடுத்து 1800 112 100 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது complaints\@fssai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம். அதேபோல் நகராட்சி சுகாதார அதிகாரி அல்லது மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications
